“நமது இளைஞர்கள் சிலர் பொது இடங்களில் சாதி கைப்பட்டை அணிவது பற்றிய செய்திகள் வேதனைப்படுத்துவதாகவும் வெட்கக்கேடாகவும் உள்ளது. இத்தகைய நடைமுறைகள் மற்றும் நடத்தைகள் மிகவும் பிற்போக்குத்தனமானவை” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தனது குடியரசு தின் உரையில் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தனது குடியரசு தின உரையில் பேசியதாவது:-
பாரதத்தின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகத்தின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்நிய ஆட்சியின் பிடியில் இருந்து நம் நாட்டை விடுவித்து சுதந்திரம் பெற்றுத் தந்த எண்ணற்ற தியாகிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இந்த நாளில் எனது நெஞ்சார்ந்த அஞ்சலி மற்றும் வீரவணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாத்து, உள்நாட்டு அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் சமூக நல்லிணக்கத்தை உறுதிசெய்து, இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி தங்கள் இடைவிடாத விழிப்பு, வீரம் மற்றும் தியாகங்களால் நமது ஆயுதப்படைகள், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் காவல்துறையின் வீரம்மிக்க படைவீரர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த மரியாதையை செலுத்துகிறேன்.
மிக்ஜாம் புயல் மற்றும் நமது மாநிலத்தின் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னலமில்லா சிறந்த மீட்பு மற்றும் நிவாரணம் வழங்கிய தன்னார்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு எனது பாராட்டுக்களையும், மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா-எல்1 ஆகிய விண்கலன்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நமது விஞ்ஞானிகள் மீது தேசம் கொண்டுள்ள பெருமித்தை பகிர்ந்து கொள்கிறேன். சர்வதேச விளையாட்டுகளில் பதக்கங்களை வென்று வரலாற்று சாதனைப் படைத்து நம் நாட்டிற்கு பெருமை சேர்த்ததற்காக நமது சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை நான் பாராட்டுகிறேன். 19 வயதுக்குட்பட்ட டி-20 உலகக் கோப்பை 2023ல் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றதற்காக நமது இளம் கிரிக்கெட் வீராங்கனைகளை நான் வாழ்த்துகிறேன்.
நண்பர்களே, நம் பாரதம் 2023 ஆம்ஆண்டில் பல அற்புதமான சாதனைகளை படைத்துள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்க சில சாதனைகள்:
* உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு பாரதம்.
* உலக பொருளாதார தரத்தில் 10வது இடத்தில் இருந்து இன்று உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக நமது பாரதம் முன்னிலை பெற்று விரைவில் 3வது இடத்தை எட்டவுள்ளது.
* நம் நாட்டில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
* நாம் சொந்தமாக 5G வலையமைப்பை அறிமுகப்படுத்தி, வேகமான சேவை வழங்கும் வெகுசில நாடுகளில் ஒன்றாகியுள்ளோம்.
* நாம் உலகின் 3வது பெரிய ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பாக மாறியுள்ளோம்.
* நாம் முதன் முதலாக விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் – விக்ராந்த்-ஐ கடற்படை சேவையில் புகுத்தி உலகின் தலைசிறந்த கடற்படை சக்திகளில் ஒன்றாகியுள்ளோம்.
* நாம் ஜி-20 தலைமை பொறுப்பு மூலம், “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற கருப்பொருளுடன் நிலையான உலகளாவிய எதிர்காலத்திற்கான உள்ளடக்கிய, சமத்துவ, மனிதத்தை மையமாகக் கொண்ட வளர்ச்சி மாடலை வழங்கியுள்ளோம்.
* வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டதன் மூலமாக ஜனநாயக ஆட்சியில் பெண்களை பெருமளவில் பங்கேற்கச் செய்து உயர்ந்த அளவில் பெண்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளோம்.
நண்பர்களே, நமது தேசம், “சப்கா-சாத், சப்கா-விகாஸ் மற்றும் சப்கா-பிரயாஸ்” என்ற உணர்வில், நமது குடிமக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான குடியுரிமைக்கான முக்கியமான பொருட்களை வழங்குவதில் அதிவேகமாக மேற்கொண்டுள்ளது. உலகளாவிய சுகாதாரம், கல்வி, குடிநீர், சமையல் எரிவாயு, கழிப்பறை, மின்சாரம் மற்றும் டிஜிட்டல் இணைப்பு உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளோம். வீடற்ற ஏழைகளுக்கு 40 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பாரதத்தின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் நேரடி பயன் பரிமாற்றம் வளர்ந்த நாடுகளுக்கு பொறாமையாகவும் வளரும் நாடுகளுக்கு உத்வேகமாகவும் மாறியுள்ளன.
நண்பர்களே, 2022ஆம் ஆண்டில், நமது மாநிலமான தமிழ்நாடு உலக செஸ் ஒலிம்பியாட்டை (FIDE) சிறந்த முறையில் நடத்தி சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கான நம் திறனை வெளிப்படுத்தியது.
தமிழகத்தைச் சேர்ந்த நமது இளம் விளையாட்டு வீரர்கள் சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுகளில் பதக்கங்களை வென்று நாட்டுக்கும், மாநிலத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆர்.பிரக்ஞானந்தா, வைஷாலி ரமேஷ்பாபு, மாரியப்பன் தங்கவேலு, தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா, சி.ஏ.பவானி தேவி, ஷரத் கமல், சத்தியன் ஞானசேகரன் ஆகியோர் இந்தியாவை 2047க்குள் விளையாட்டு துறையில் நமது தேசத்தை வல்லரசு நாடாக மாற்றும் ஊக்கநாயகர்களாக உள்ளனர்.
நண்பர்களே, பாரதத்துக்கான புத்தாண்டு – உற்சாகம், ஆற்றல், தன்னம்பிக்கை மற்றும் அமிர்தகாலமான அடுத்த 25 ஆண்டுகளில் நமது நாட்டை முழு வளர்ச்சியடைந்த நாடாக, வளர்ச்சியடைந்த பாரதமாக மாற்றும் உறுதியுடன் தொடங்கியுள்ளது. அயோத்தியில் உள்ள பிரம்மாண்டமான ஸ்ரீராமர் கோயிலில் ஸ்ரீ ராம் லல்லாவின் ‘பிராண பிரதிஷ்டையின்‘ சகாப்த நிகழ்வு சில நாட்களுக்கு முன்பு நடந்தேறியது. இந்த வரலாற்றுபூர்வ நிகழ்வு முழு தேசத்தையும் உற்சாகப்படுத்தி, தன்னம்பிக்கையுடன், மேலும் முழுமையான வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க உதவும் புதிய ஆற்றலைப் புகுத்தியுள்ளது.
ஸ்ரீராமர் நமது தேசிய அடையாளமாகவும், உத்வேகமாகவும் இருந்துள்ளார். அவர் பாரதத்தை ஒருங்கிணைத்து ஒவ்வொரு குடிமகனின் இதயங்களிலும் வாழும் பொதுவான நூலிழை. அவரின் உத்வேகம் மற்றும் அவரது ஆட்சி, ராமராஜ்ஜிய நல்லாட்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக, அவரின் லட்சியங்கள் நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ளன.
நண்பர்களே, ஸ்ரீராமருக்கு தமிழ்நாட்டுடன் ஆழமான தொடர்பு உள்ளது. இவருடைய கதை சங்க காலத்திலிருந்தே தமிழ் இலக்கியத்தை ஊக்குவித்து செழுமைப்படுத்தி, கர்நாடக இசையின் ஆன்மாவாக திகழ்ந்து மற்றும் நமது பாரம்பரிய நடனத்தை வளப்படுத்தியுள்ளது. ஸ்ரீராமனின் கதையை சமஸ்கிருதத்திற்கு பிறகு, பிற பாரதிய மொழிகளில் சொல்லப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே ஸ்ரீராமரின் பக்தர்களில் மிகவும் தீவிரமானவரும், கவிஞருமான கம்பர் தமிழில் ‘இராமவதாரம்‘ என தலைப்பிட்டு எழுதியது தமிழ்நாட்டில்தான்.
நண்பர்களே, கம்பர் பிறந்த புனிதத் தலமான தேரழந்தூருக்குச் சென்றதை நான் பாக்கியமாக உணர்ந்தேன். அவர் பிறந்த இடம் என்று நம்பப்படும் கம்பர் மேடு என்ற இடத்தில், அவர் கண்ணுக்கு புலப்படாத அதே சமயம் தெளிவாக இருப்பதை என்னால் உணர முடிந்தது. கம்பர் மீது உள்ளூர் மக்கள் கொண்டுள்ள அன்பு மற்றும் பக்தியின் தீவிரம் என் மனதை தொட்டது. கம்பர் ‘இராமாவதாரம்’ எழுதிய பிறகு அதை ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாத சுவாமி முன் வைத்தார் என்று நம்பப்படுகிறது. ஸ்ரீ ரங்கம் கோயில் வளாகத்தில் கம்பர் மணிமண்டபம் உள்ளது, அங்கு அவர் தனது திருமுறைகளைப் படித்ததாக நம்பப்படுகிறது. கம்பர் மணிமண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தது என் பாக்கியம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், நமது தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று, நமது ஆளுமைமிக்க பெண்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் இளைஞர்களைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.நமது பெண்கள், பல சுய உதவி குழுக்களின் மூலம் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். அவர்கள் பல வெற்றி கதைகளை நிகழ்த்தி வருகின்றனர். நமது விவசாயிகள் முற்போக்கு விவசாய முறை, புதுமை மற்றும் இயற்கை விவசாயத்தின் மீது கொண்ட பற்றால் மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப விவசாய முறைகளை மாற்றி பல்வேறு புது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றில், தினை விவசாயம், பன்முகப்படுத்தப்பட்ட விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட வேளாண் சார்ந்த மதிப்பு கூட்டல் தொழில்களின் மூலம் விவசாயிகளின் வருவாய் அதிகரித்து வருவது பாராட்டத்தக்கது.
நமது மீனவர்கள் நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு மதிப்புமிக்க பங்களிப்பைச் செய்து வருகின்றனர். தென் தமிழகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம் போன்ற கடுமையான பேரிடர்களை எதிர்கொண்டு, மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுப்பட்ட நமது மீனவர்களின் பங்களிப்பு மிகவும் பாராட்டத்தக்கது.
நமது ஆர்வமுள்ள இளைஞர்கள் சிறு, குறு மற்றும் நடுத்தரத் துறைகளை இயக்கி, நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பைச் செய்து வருகின்றனர். மேலும் பல புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர். நமது விஸ்வகர்மாக்கள், பல்வேறு துறைகளில் உள்ள கைவினைஞர்கள், நமது சமுதாயத்திற்கு மதிப்புமிக்க அத்தியாவசிய சேவைகளை செய்து வருகின்றனர். மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் அவர்களுக்கு அதிகம் பொருளீட்டவும், தேசத்திற்கு அதிக பங்களிப்பை அளிக்கவும் உதவுகிறது.
நண்பர்களே, மிகச்சிறந்த மனித வளம், தரமான உள்கட்டமைப்பு வசதி மற்றும் நல்ல தொழில்துறை அடித்தளம் ஆகியவற்றைக் கொண்ட நமது மாநிலம் நாட்டின் வளர்ச்சியின் வழிகாட்டியாக இருக்கக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது. நமது இளைஞர்கள் மேலும் பல திறன் சார்ந்த கல்வியைப் பெறுவது அவசியம். குறிப்பாக இன்றைய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் கொண்ட யுகத்திற்கு தேவையான திறன்களுடன் நமது இளைஞர்களை தொழில் முனைவோராக ஊக்கப்படுத்துவது அவசியம். தற்போது நிலவும் வேலை தேடும் மனப்பான்மை மாறி, அவர்களில் அதிகமானோர் புதிய வேலை வாய்ப்பை உருவாக்குபவர்களாக ஆக வேண்டும்.
மத்திய அரசின் ‘அடல் இன்னோவேஷன் மிஷன்’ பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மேலும் பல புதுமை ஆய்வகங்கள் மற்றும் புத்தாக்க மையங்களை உருவாக்க உதவுகிறது. நமது மாநில அரசும் இதற்கான முயற்சிகளை எடுத்துள்ளது. பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இதில் ஆர்வத்துடன் ஈடுபட்டு இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து அவர்களை ஊக்குவிக்க நான் கேட்டுக்கொள்கிறேன்.
பாரதம் முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகவேகமாக வளர்ந்து வருகிறது. இன்று, அனைத்து மாநிலங்களும் அபிலாஷைகளுடனும் போட்டித்தன்மையையும் கொண்டுள்ளன. நீண்ட காலமாக வளர்ச்சியில் பின்தங்கிய பல மாநிலங்கள் தெளிவான உறுதியுடன் முன்னேறி வருகின்றன. உலக வணிகங்கள் நமது நாட்டை ஒரு விருப்பமான முதலீட்டு இடமாகவும், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஒரு முக்கிய இணைப்பாகவும் பார்க்கின்றன. உலகளாவிய மற்றும் பிராந்திய புவி-அரசியல் சூழல் பாரதத்திற்கு மிகவும் சாதகமாக உள்ளது.
இது நமக்கு ஒரு வரலாற்று மிக்க சிறந்த வாய்ப்பாக திகழ்கிறது. அதை நம் மாநிலம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொருவரும் இந்த வரலாற்றுபூர்வ வாய்ப்பை உணர்ந்து தேசத்திற்காக நம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும். எதிர்காலத்தில்,நாம் நமது செழுமையான தமிழ் பாரம்பரியத்தின் பெருமையுடனும், நம்பிக்கையுடனும் இதைச் செய்ய வேண்டும்.
நண்பர்களே, இந்த தேசியப் பணியில் நாம் ஒரே குடும்பமாகவும் ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும். ஏற்றுக்கொள்ள முடியாத சமூகப்பாகுபாடுகள் மற்றும் அதனால் ஏற்படும் வன்முறைகள் பற்றிய இடைப்பட்ட ஊடக அறிக்கைகள் மிகவும் வேதனையளிக்கின்றன. நமது இளைஞர்கள் சிலர் பொது இடங்களில் சாதி கைப்பட்டை அணிவது பற்றிய செய்திகள் வேதனைப்படுத்துவதாகவும் வெட்கக்கேடாகவும் உள்ளது. இத்தகைய நடைமுறைகள் மற்றும் நடத்தைகள் மிகவும் பிற்போக்குத்தனமானவை. தமிழகத்தின் அனைத்து சகோதர சகோதரிகளை இதனை விரைவில் ஒழிக்க உணர்வுப்பூர்வமாக செயல்படுமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
நம் மக்களிடம் மகத்தான, உள்ளார்ந்த மற்றும் நேர்மறை ஆற்றல் உள்ளது. பலர் தங்கள் தனிப்பட்ட முயற்சிகளால் சமுதாயத்திற்கு பெரும் சேவை செய்து வருகின்றனர். சிலர் நமது சக குடிமக்களிடையே உள்ள ஏழைகள், ஆதரவற்றோர் மற்றும் ஊனமுற்றோருக்கு உதவுகிறார்கள், சிலர் சமூக சொத்துக்களை மேம்படுத்துகிறார்கள் அல்லது புதியவற்றையும் உருவாக்குகிறார்கள், சிலர் ஆறுகள், ஓடைகள் மற்றும் இயற்கை நீர்நிலைகளை சுத்தம் செய்து மீட்டெடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றனர், சிலர் காடுகளைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளனர்.
பாரத பிரதமர் தனது ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் நமது மாநிலத்தின் இத்தகைய சிறப்புமிக்க கதாநாயகர்களை பற்றி குறிப்பிட்டு வருகிறார். இந்த உள்ளார்ந்த நற்குணங்கள் நமது சாதாரண மக்களிடையே மேலும் ஊக்குவிக்கப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, இதுபோன்ற சேவைகளுக்காக விருதுகளை அறிவித்து, நம் மாநிலத்தில் சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் சில அறியபடாத மாவீரர்களை குடியரசு தின விழா வரவேற்பு நிகழ்ச்சியில் இவர்களை கௌரவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
நண்பர்களே, இது பாரதத்தின் பொன்னான தருணம். உலகளாவிய பிரச்சனைகளை தீர்க்கவும், நீடித்த எதிர்காலத்திற்கான வழியைக் காட்டவும் உலகம் நம்மை நம்பிக்கையோடு எதிர்நோக்கியுள்ளது. உலகை ஒரே குடும்பமாக கருதும் பாரதத்தின் உள்ளார்ந்த கலாசார பண்பாடு –‘ யாதும் ஊரே, யாவரும் கேளிர் ’– என்ற உலகளாவிய நம்பிக்கையை நமக்கு பெற்றுத்தந்துள்ளது. நாம் எழுச்சி பெற்று உலகளாவிய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து, முழுமையான திறன் கொண்ட பாரதத்தை உருவாக்க நம்மால் இயன்ற பங்களிப்பை வழங்குவோம். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது குடியரசு தினவாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஆளுநர் கூறியுள்ளார்.