மூழ்கும் தமிழ்நாடு மின்வாரியத்தைக் காப்பாற்ற சீர்திருத்தம் தேவை: அன்புமணி

மின்கட்டண உயர்வால் ரூ.23,863 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கிறது. ஆனாலும் இழப்பு குறையவே இல்லை.. எனவே மூழ்கும் மின்வாரியத்தைக் காப்பாற்ற சீர்திருத்தம் தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் மின்கட்டணங்கள் உயர்த்தப்பட்டதன் காரணமாக மின்வாரியத்திற்கு 7 மாதங்களில் ரூ.23,863.29 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருக்கும் போதிலும், மின்சார வாரியத்தின் இழப்பு குறைவதற்கு பதிலாக அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மின்சாரக் கொள்முதல் செலவு அதிகரித்திருப்பது தான் இழப்புக்கான முதன்மைக் காரணம் என்று கூறப்படும் நிலையில், கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் மின்சார வாரியத்தைக் காப்பாற்ற உடனடியாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.

2022-23ஆம் நிதியாண்டு நிறைவடைந்து 10 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், அந்த ஆண்டுக்கான ஆண்டறிக்கையை இப்போது தான் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, மின்வணிகத்தின் மூலமான வருவாய் முந்தைய ஆண்டின் வருவாயான ரூ.56,994.48 கோடியிலிருந்து ரூ.23,863.29 கோடி அதிகரித்து ரூ.80,857.77 கோடியாக அதிகரித்திருக்கிறது. மின் வணிகத்தின் அளவு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்காத நிலையில், வருவாய் அதிகரித்ததற்கு காரணம் 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு தான் என்பதை -புரிந்து கொள்ள முடிகிறது. இதில் சுமார் 20% மின் வணிகம் அதிகரித்ததன் காரணமாக கிடைத்தது என்று வைத்துக் கொண்டாலும், கட்டண உயர்வின் மூலம் 7 மாதங்களில் சுமார் ரூ. 18,400 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருக்கிறது. ஆண்டு முழுமைக்கும் கணக்கிட்டால் மின்கட்டண உயர்வின் மூலம் மின்சார வாரியத்திற்கு ரூ.31,500 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் 2022 செப்டம்பர் மாதம் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்ட போது, அதன் மதிப்பு குறிப்பிடப்பட வில்லை. ஆனால், ஆண்டுக்கு ரூ.31,500 கோடிக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது மிக மிக அதிகம் ஆகும். மிகக்குறைந்த அளவில் தான் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதாகவும், அதனால் 90% மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் மின்சார வாரியம் கூறி வந்த நிலையில், மின்கட்டண உயர்வின் உண்மையான தாக்கம் இப்போது தெரியவந்துள்ளது. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

2021-22 ஆம் ஆண்டில் மின்சார வாரியத்தின் மொத்த இழப்பு ரூ.9130 கோடி ஆகும். மின் வாரியத்திற்கு 7 மாதங்களில் ரூ.18,400 கோடி கூடுதல் வருமானம் கிடைத்துள்ள நிலையில், அதன் உதவியுடன் 2022-23 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியம் இழப்பிலிருந்து மீண்டு, சுமார் ரூ.10,000 கோடி அளவுக்கு இலாபம் ஈட்டியிருக்க வேண்டும். ஆனால், முந்தைய ஆண்டின் இழப்பை விட அதிகமாக 2022-23ஆம் ஆண்டில் ரூ.9192.25 கோடி இழப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் சந்தித்திருக்கிறது. இது நியாயமற்றது.

அதிக வருவாய் ஈட்டியும், மின்சார வாரியத்தின் இழப்பு குறையாததற்கு காரணம் அதன் மின் கொள்முதல் செலவுகள் மிகக்கடுமையாக அதிகரித்திருப்பது தான். கொள்முதல் செய்யப்பட்ட மின் அளவு துல்லியமாக தெரியவில்லை என்றாலும், அதற்கான செலவு, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ரூ.11,625 கோடி அதிகரித்திருக்கிறது. அதேபோல், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சொந்த மின்னுற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தின் அளவு அதிகரிக்கவில்லை என்றாலும், அதற்கான செலவு ரூ.7875 கோடியிலிருந்து ரூ.10,622 கோடியாக அதிகரித்திருக்கிறது. இதுவும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும்.

ஒரு மாநிலத்தின் மின்சார வாரியம், சொந்தமாக மின்சாரம் உற்பத்தி செய்ய ஆகும் செலவை விட 5 மடங்கு அதிக தொகைக்கு வெளியிலிருந்து மின்சாரம் வாங்கினால், அது இழப்பிலிருந்து மீளவே முடியாது. தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த ஆண்டில் ரூ.10,622 கோடி மதிப்புக்கு மின்சாரம் உற்பத்தி செய்துள்ள நிலையில், ரூ.50,990 கோடிக்கு வெளியிலிருந்து மின்சாரம் வாங்கியுள்ளது. இதற்குக் காரணம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில், பல ஆண்டுகளாக புதிய மின்சாரத் திட்டங்கள் செயல்படுத்தபடாதது தான். அதனால் ஒரு யூனிட் ரூ.3 முதல் ரூ.4 வரையிலான செலவில் வாங்கப்பட வேண்டிய மின்சாரத்தை வெளிச்சந்தையில் ரூ.9 என்ற அளவில் தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து வாங்கி வருவது தான் மின்வாரியத்தின் இழப்புக்கு காரணம் ஆகும். இதன் காரணமாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மொத்த இழப்பு கடந்த ஆண்டில் ரூ. 1,37,533 கோடியாக அதிகரித்திருக்கிறது. இந்தத் தொகைக்காக மின்வாரியம் ஆண்டு தோறும் ரூ.13,500 கோடியை வட்டியாக செலுத்துகிறது. இந்த நிலை உடனடியாக மாற்றப்படவேண்டும்.

தமிழ்நாட்டில் 17,340 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின்திட்டங்கள் உருவாக்கப்பட்டு 17 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு 5,700 மெகாவாட் மின்திட்டங்கள் தொடங்கப்பட்டு பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ளன. இத்திட்டங்கள் தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடையப் போகும் நிலையில், இவற்றிலிருந்து இதுவரை ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யப்படவில்லை. தமிழ்நாட்டில் 17,970 மெகாவாட் அனல் மின்திட்டங்களை அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப் போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், அதிலும் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை.

நிலுவையில் உள்ள மின்திட்டங்கள் அனைத்தும் விரைவாக செயல்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டுக்கான மின் தொகுப்பில் சேர்க்கப்பட வேண்டும். அதன் மூலம் மின்சாரக் கொள்முதல் செலவைக் குறைந்து, தமிழ்நாடு மின்சார வாரியத்தை மீண்டும் லாபத்தில் இயக்கச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.