தமிழ்நாட்டில் எழும் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளுநர் ரவி மையமாக இருப்பது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடந்த ஆகஸ்ட் மாதம் பணி ஓய்வு பெற்றார். துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக, தேடுதல் குழுவை நியமித்து, தமிழக அரசு கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இதற்கிடையே தேடுதல் குழுவை அமைத்து ஆளுநர் உத்தரவிட்டார். பின்னர் துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கு யுஜிசி பிரதிநிதி அடங்கிய குழு அமைத்து வெளியிட்ட அறிவிக்கைகளைத் திரும்பப் பெறுவதாக தமிழக ஆளுநர் தெரிவித்தார். பலக்லைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநருக்கும், அரசுக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் எழும் சர்ச்சைகளுக்கு ஆளுநரே மையப்புள்ளியாக இருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “1857ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் 3 பல்கலைக்கழகங்களில் ஒன்று சென்னை பல்கலைக்கழகம். சென்னை பல்கலைக்கழகத்தில் 5 மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் இருப்பதற்கு ஆளுநர் ரவி, துணைவேந்தர் நியமனத்தில் தமிழ்நாடு அரசுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதே காரணம். தமிழ்நாட்டில் பல சர்ச்சைகளின் மையத்தில் தமிழக ஆளுநர் இருப்பது ஏன்? ஆளுநர் தான் பல சர்ச்சைகளுக்கு காரணம் என சிலர் கூறுகின்றனர். நாட்டின் உயர்கல்வியின் நிலை குறித்த வருத்தமான கருத்து இது” எனத் தெரிவித்துள்ளார்.