நீதிபதி பதவிகளுக்கான நேர்காணல் செய்யும் நீதிபதிகளில் நால்வரில் இருவர் பிராமணர்கள்: கி.வீரமணி!

தமிழ்நாடு தேர்வாணையத்தில் நடக்க இருக்கும் நீதிபதி பதவிகளுக்கான நேர்காணல் செய்யும் நீதிபதிகளில் நால்வரில் இருவர் பிராமணர்களாக இருப்பதற்கு திராவிடர் கழக தலைவர் கி வீரமணி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து திராவிடர் கழக தலைவர் கி வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் இதுவரை நீண்ட காலம் காலியாக உள்ள நீதித்துறை நியமனங்கள் – 245 பதவிகளுக்கான தேர்வு வருகின்ற 29.1.2024, திங்கள் முதல் தொடர்ந்து 10 அல்லது 12 நாள்கள் சென்னையில் நடைபெறவிருக்கிறது. தமிழ்நாடு தேர்வாணையத்தில் பணி நியமன முறை இத்தேர்வுகள் முதலில் எழுத்து பூர்வ தேர்வு (அதற்குரிய மதிப்பெண் தனி), அடுத்து அந்த எழுத்துத் தேர்வில் போதிய அல்லது அதிக மதிப்பெண் பெற்றவர்களில் நேர்காணலுக்குத் தகுதியுள்ளவர்களை அழைத்து, நேரில் கேள்விகள் கேட்டு அதற்கென தனி மதிப்பெண்களை வழங்கி – தேர்வு செய்யப்படுவார்கள். அத்தகையவர்களின் தேர்வு, பெரிதும் நேர்காணல் மூலம் பெறும் தேர்வு மதிப்பெண்கள் மூலமே இறுதி முடிவு – மொத்த கூட்டலின் மூலம் – வெளியாகும். written test Marks + Interview Marks என்பது கூட்டுத் தொகை மூலம் தான் இறுதிப் பட்டியலை தமிழ்நாடு தேர்வாணையம் அறிவிக்கும். நீதித்துறை சம்பந்தப்பட்ட இந்தப் பதவிகள் 245 ஆகும். இதில் தேர்வுக்கான நேரிடைக் கேள்வி – பதில்கள் மூலம் போட்டியிடும் நபர்களின் தேர்வை, நேர்காணலின் முடிவுகளை வழக்கமான தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் உறுப்பினர்களோடு – நான்கு உயர்நீதிமன்ற நீதிபதிகளும் மேசைக்கு ஒருவராக இந்த 10 அல்லது 12 நாள்களில் அமர்ந்து கேள்வி கேட்டு மதிப்பெண் வழங்கி தேர்வை இறுதியாக்குவர்.

வருகின்ற 29.1.2024 அன்று துவங்கவிருக்கும் அத்தேர்வு – நீதிபதி பதவிகளுக்குரியதை நேர்காணல் நடத்தி, மதிப்பெண் தருவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் நான்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று வரும் செய்தியில், நான்கில் இரண்டு பேர் பிராமண வகுப்பைச் சேர்ந்த நீதிபதிகள் ஆவர். பிரச்சினைக்குரிய நீதிபதி ஒருவரும் இடம் பெற்றுள்ளார். அதில் ஒருவர் மிகவும் பிரச்சினைக்குரிய தனது விருப்பு வெறுப்புகளை வெளிப்படையாகவே தமது தீர்ப்புகளில் பகிரங்கப்படுத்தி எழுதி பொது மக்கள், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் போன்றவர்களின் விமர்சனத்திற்கும், கண்டனத்திற்கும் (பொது மேடைகளில்) ஆளானவர்!

உயர்நீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர்களில் ஒருவர்கூட தாழ்த்தப்பட்ட, பழங்குடியின (S.C., S.T.,) சமூகத்தைச் சார்ந்தவர்களோ, சிறுபான்மை (Minority community) சமூகத்தவர்களான முஸ்லீம், கிறிஸ்தவர்கள் அல்லது மற்ற சமூகத்தைச் சார்ந்தவர்களாகவோ இல்லாதது – மிகப் பெரிய ஏமாற்றத்திற்கு உரியது. அவர்களுக்கு சமூகநீதிப்படி நியாயம் கிடைத்து போதிய எண்ணிக்கையில் பதவிகள் பெறுவார்களா? இந்நிலையில் விகிதாசார கணக்கு விகிதப்படி சார்பு நிலை இல்லாமல் நேர்காணல் மூலம் தேர்வுகள் நடைபெறக்கூடிய வாய்ப்பு ஏற்படுமோ என்ற சந்தேகம் பெரிதாக பலரிடமும் ஏற்பட வாய்ப்பு உண்டாகும் நிலை உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை!

தனிப்பட்ட முறையில் நமக்கு எந்த உள்நோக்கமோ, குறிப்பிட்டவர்கள் தேர்வாக வேண்டும் என்ற சொந்த விருப்பு, வெறுப்பு ஒட்டியோ இல்லாமல் பொது நோக்கத்தோடு இதனை நமது பெருமைக்குரிய மதிப்பிற்குரிய மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்களின் மேலான பார்வைக்கு உரிய திருத்த நடவடிக்கை அவசரத் தேவை என்ற அடிப்படையில் சமர்ப்பிக்கின்றோம். தற்போதுள்ள தலைமை நீதிபதி அவர்கள் வந்து பொறுப்பேற்றுள்ள நிலையில், சமூகநீதி மண் இது என்பதை நன்கு உணர்ந்தவர். இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி சமூகநீதி வழங்குதல் என்பது அதன் மாற்றப்படவே முடியாத அடிக்கட்டுமானம் (Basic Structure of our Constitution) என்பதை நன்கு அறிந்தவர். நியாயம் வழங்குவதில் “அனைவருக்கும் அனைத்தும்” கிடைக்கும் வண்ணம் ஓர்ந்து கண்ணோடாது நடந்து கடமையாற்றும் கண்ணியமிக்க நீதியரசர் ஆவார். ஆகவே, இந்த நிலைமையில் உடனே தலையிட்டு, மற்ற நீதிபதிகளுக்கும் – தாழ்த்தப்பட்ட, பழங்குடியின (S.C., S.T.,) இதர பிற்படுத்தப்பட்ட மகளிர், மைனாரிட்டிகளின் பிரதிநிதித்துவம் தந்து 10, 12 நாள்களுக்கும் இந்த நான்கு பேர்களாக மட்டும் பங்கேற்பார்கள் என்ற நிலையில்லாமல், பலரையும் இணைத்து பல்வேறுபட்ட சமூகத்தவர் குறிப்பாக – “அனைவருக்கும் அனைத்தும்” என்ற நிலைதான் ‘சமூகநீதி’ என்பதற்கொப்ப, மேலும் ஒவ்வொரு நாளும் சுழற்சி (ROTATION) முறையிலோ அல்லது அவரது மேலான சிந்தனைக்கு ஏற்ப மாறுதலை உடனடியாகச் செய்ய வேண்டுகிறோம். சமுகநீதி என்பது அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமை என்பதாலும் – வேண்டு கோளாகவும் வைக்கின்றோம்!

மக்கள் தொகையில் வெறும் 3 சதவிகிதத்தவரில் இரண்டு நீதிபதிகள் – அதிலும் ஒருவர் பிரச்சினைக் குரியவராகவே மக்கள் மன்றத்தில் உணரப்படுபவர் ஆவார். Diversity is the Necessity என்பதைப் பல முறை நீதிபதிகள் நியமன கொலிஜியத்தின் பரிந்துரைகளில் வெளிப்படையாக கூறியுள்ளது உச்சநீதிமன்றம். பல்லாண்டுக் காலம் பணியாற்ற வாய்ப்புள்ள பதவி நியமனத்தில் சமூகநீதி பார்வை அவசியம் அல்லவா! பல ஆண்டுகள் பதவியில் இருக்கப் போகும் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் தேர்வில் போதிய அளவு (Adequate representation) தத்துவத்தை செயல்படுத்த, இந்த 4 உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் மாற்றப்பட்டு, மற்ற சமூக நீதிபதிகள் நியமனம் மூலம், உயர்நீதி மன்றத்தின் நீதி பரிபாலனத்தின்மீது நம்பிக்கை சிதையாமல் காக்க வேண்டும் என்று, சமூகநீதிப் பணியாளர்களின் குரலாக இதனை முன் வைக்கிறோம்.

75ஆம் ஆண்டு குடியரசு நாள் கொண்டாட்டத்தின் போது இப்படி ஒரு சமூகநீதிக்கான சவாலும் – சங்கடமும் ஏற்படுவதைத் தடுத்து உரிய சமூகநீதி கிடைக்கும் வகையில் மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்கள் பரிகாரம் செய்ய வேண்டியது அவசரமும் – அவசியமும் அல்லவா!. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.