இந்தியாவின் ஜனநாயகத்தை சுப்ரீம் கோர்ட்டு வலுப்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி

இந்தியாவின் ஜனநாயகத்தை சுப்ரீம் கோர்ட்டு வலுப்படுத்தியுள்ளது. நம்பகமான நீதித்துறை அமைப்பை உருவாக்க அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

சுப்ரீம் கோர்ட்டு பவள விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு சிறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியதாவது:-

3 புதிய குற்றவியல் நீதிச் சட்டங்கள் இயற்றப்பட்டதன் மூலம், இந்தியாவின் சட்டம், காவல் மற்றும் விசாரணை அமைப்புகள் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளன. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய சட்டங்களில் இருந்து புதிய சட்டங்களுக்கு மாறுவது சீராக இருப்பதை உறுதி செய்வது முக்கியம். இது தொடர்பாக, அரசு ஊழியர்களுக்கான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு பணிகளை நாங்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளோம்.

அதிகாரம் பெற்ற நீதித்துறை அமைப்பு வளர்ந்த இந்தியாவின் ஒரு பகுதியாகும். நம்பகமான நீதித்துறை அமைப்பை உருவாக்க அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த திசையின் ஒரு படிதான் ஜன் விஸ்வாஸ் மசோதா. எதிர்காலத்தில், இது நீதித்துறையின் தேவையற்ற சுமையை குறைக்கும். சுப்ரீம் கோர்ட்டு இந்தியாவின் துடிப்பான ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளது. மேலும் சமூக, அரசியல் சூழலுக்கு புதிய திசையை வழங்கியுள்ள தனிமனித உரிமைகள், பேச்சு சுதந்திரம் ஆகியவற்றில் பல முக்கியமான தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

நாட்டின் இன்றைய பொருளாதார கொள்கைகள் நாளைய ஒளிமயமான இந்தியாவின் அடித்தளமாக அமையும். இன்று இந்தியாவில் இயற்றப்படும் சட்டங்கள் நாளைய ஒளிமயமான இந்தியாவை மேலும் வலுப்படுத்தும். இன்று இயற்றப்படும் சட்டங்கள் இந்தியாவின் எதிர்காலத்தை பிரகாசமாக்கும். உலக அளவில் மாற்றங்கள் நிகழும் நிலையில், உலக நாடுகளின் நம்பிக்கை இந்தியாவில் வலுப்பெற்று வருவதால், உலகின் பார்வை இந்தியாவையே நோக்கியுள்ளது. இதுபோன்ற சமயங்களில், இந்தியா தமக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வது முக்கியம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.