பொன்முடியின் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2006 – 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.75 கோடி சொத்துக்கள் சேர்த்ததாக பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி மீது 2011-ல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த 2016 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி தீர்ப்பளித்தார். டிசம்பர் 21-ந் தேதி 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

இத்தீர்ப்புக்கு எதிராக பொன்முடி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இம்மேல்முறையீட்டு மனுவை அண்மையில் விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிமன்றத்தில் பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சியும் சரணடைய விலக்கு அளித்தது. இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற விசாரணையில், பொன்முடி, மனைவி விசாலாட்சிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுத்தது. மேலும் பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 4 வாரங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் பதிலளிக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு.