எங்களை நீங்கள் சங்கி என்று சொன்னால் எங்களுக்கு பெருமை தான்: வானதி சீனிவாசன்

“வரும் மக்களவைத் தேர்தலில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளிடமும் ஆதரவு கேட்போம். அனைவரிடமும் ஆதரவு கேட்பது எங்களுடைய வேலை. ஆதரவு கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் அவரவரது விருப்பம்” என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவரும், தமிழக சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக பாஜக சார்பில், ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று தென்சென்னை தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. ஏற்கெனவே, பாஜக தேர்தல் பணிகளைத் துவக்கிவிட்டது. இந்த தேர்தல் அலுவலகம், தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்கான மிக முக்கியமான மையமாக இருக்கும். இந்த தேர்தல் அலுவலகங்கள், பாஜகவின் வெற்றிக்கு மிகப்பெரிய அடித்தளமாக இருக்கும்.

இண்டியா கூட்டணியில் மிக முக்கியமாக பங்கு வகித்த நிதீஷ்குமார் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்திருக்கிறார். கடந்த பத்து நாட்களில் இந்த கூட்டணியில் இருந்தவர்கள் எல்லாம் எப்படி பிரிந்து செல்கின்றனர், என்பதை பார்த்து வருகிறோம். எந்த மாநிலத்தில் யாரைத் தொடர்பு கொள்வது, யாருடன் கூட்டணி அமைப்பது என்று தேசிய தலைமை கவனித்து வருகிறது. தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு என்ன செய்துள்ளது என்பதை விளக்கி பாஜக பிரச்சாரம் செய்யும். தமிழகத்தில் கூட்டணி குறித்து தேசிய தலைமை அறிவிக்கும் வரை அதுதொடர்பாக நாங்கள் எதுவும் பேசுவதற்கு இல்லை.

இண்டியா கூட்டணி சுயநலத்துக்காக தொடங்கப்பட்ட கூட்டணி என்று ஆரம்பம் முதலே கூறி வந்தோம். இந்த கூட்டணி நிலைக்காது என்பதை மீண்டும் மீண்டும் கூறி வந்தோம். அக்கூட்டணியில் உள்ள தலைவர்களுக்கு மக்கள் நலனிலும் நாட்டின் வளர்ச்சியிலும் அக்கறை இல்லை. இதனால், அந்த கூட்டணி சிதறிக் கொண்டு இருக்கிறது. பாஜகவைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் புதிய உறவுகளை, புதிய கட்சிகளைச் சேர்த்துக் கொண்டே இருக்கிறது. வரும் தேர்தலில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளிடமும் ஆதரவு கேட்போம். அனைவரிடமும் ஆதரவு கேட்பது எங்களுடைய வேலை. ஆதரவு கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் அவரவரது விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “சங்கி என்பது கெட்டவார்த்தை இல்லை. எனது மகள் சரியாகவே பேசியுள்ளார். ஆன்மிகவாதியான என்னை சங்கி என்று கூறுவது அவருக்கு பிடிக்கவில்லை” என்று தெரிவித்தார். ரஜினிகாந்த் இப்படி கூறியது குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், “பாஜகவுக்கு எதிரான கொள்கையை வைத்திருப்பவர்களும், எதிர் கருத்து வைத்திருப்பவர்களும் எங்களை இழிவுப்படுத்தும் ஒரு சொல்லாக ‘சங்கி’ என்பதை பயன்படுத்துகின்றனர். இது ரொம்ப நாளாகவே நடந்து கொண்டு உள்ளதாகவும் கூறினார்.

சங்கி என்றால் என்ன என்று நான் அர்த்தம் சொல்லட்டுமா? இந்த நாட்டை நேசிக்கின்ற, இந்த நாட்டின் நலன்களில் சமசரம் செய்து கொள்ளாத உண்மையான குடிமக்கள் தான் சங்கி. அப்படி எங்களை நீங்கள் சங்கி என்று சொன்னால் எங்களுக்கு பெருமை தான் என்றும் கூறினார்.

அதற்கு ஒரு செய்தியாளர் அப்புறம் ஏன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது தந்தை சங்கி இல்லைன்று கூறியுள்ளாரே என்று கேள்வியெழுப்பவே, “அதை பத்தி நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்ல முடியும்?” என்று பதில் அளித்தார்.