நிர்மலா சீதாராமனுக்கு எதற்காக 10 ஆண்டுகள் உயர் பதவி கொடுத்தார்கள் என பாஜகவுக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி 2016 சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் தனித்துப் போட்டியிட்டு கனிசமான வாக்குகளைப் பெற்றது. அதுபோலவே 2019 மக்களவைத் தேர்தலிலும், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டது. எனினும் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. இந்த நிலையில் வரும் மக்களவைத் தேர்தலிலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தனித்தே போட்டியிடுவோம் என்று அறிவித்த சீமான், அனைத்து கட்சிகளையும் முந்திக்கொண்டு வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். இந்த நிலையில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடன் சீமான் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அதில், தேர்தலில் போட்டியிடுவது, பூத் கமிட்டி, பரப்புரை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது:-
தேர்தலில் நின்று மக்களையே சந்திக்காத நிர்மலா சீதாராமனுக்கு 10 ஆண்டுகளாக ஏன் உயர்ந்த பதவியை பாஜக தந்துள்ளது? அதுபோலவே தேர்தலிலேயே நிற்காத ஜெய்சங்கருக்கு எதற்கு வெளியுறவு துறை அமைச்சர் பதவி? தேர்தலில் வென்ற எத்தனை பேர் வெறும் மக்களவை உறுப்பினர்களாகவே இருக்கிறார்கள்? மக்களை சந்தித்து அவர்களின் நன்மதிப்பை பெறாதவர்களிடம், எப்படி மக்களை ஆள்வதற்கான அதிகாரத்தை கொடுத்தார்கள்? அருண் ஜெட்லி ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். அவர் அமைச்சர் ஆகக்கூடாது என்பதற்காகத்தான் அவரை மக்கள் தோற்கடித்தார்கள். அவரை ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கியது எங்களுக்கு பிரச்னை இல்லை? மீண்டும் எங்கள் மீது அதிகாரம் செலுத்தும் அமைச்சர் பதவியை எதற்காக தந்தீர்கள்?
தம்பி எல்.முருகன் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டார். அவரை மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கி மத்திய அமைச்சர் ஆக்குகிறீர்கள்? எப்படி? ஜனநாயகத்திற்கு எதிரான துரோகம் இது. தேர்தலில் வெற்றி பெறாதவர்களுக்கு அமைச்சர் பதவி இல்லை என்ற சட்டம் கொண்டு வர வேண்டும். இவையெல்லாம் தான் தவறாக இருக்கிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின் அரசாங்கம் ஒரு சட்டம் போட்டால் அதில் ஆளுநர் கையெழுத்து இடுவதில்லை. 8 கோடி மக்களால் தேர்வான அரசுக்கு இல்லாத வலிமை ஒரு நியமன உறுப்பினரான ஆளுநருக்கு உள்ளதா? இவ்வளவு அதிகாரத்தை அவரிடம் ஏன் குவிக்கிறீர்கள்? ஆளுநர் கையெழுத்து போட்டால் தான் 8 கோடி மக்களின் உரிமை பாதுகாக்கப்படும் என்றால் இது என்ன ஜனநாயக நாடு?
ஆக இந்த அமைப்பு தவறாக இருக்கிறது, அதனை மாற்ற வேண்டும். வாக்கு இயந்திரத்தை மாற்ற மறுக்கீறீர்கள்.. நீங்களா நேர்மையான தலைவர், நீங்களா நேர்மையாக தேர்தலை சந்திக்கிறவர்..? உலகத்திலேயே இந்தியா, நைஜீரியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் மட்டும் தான் வாக்கு இயந்திரம் உள்ளது. அதிலும் பங்களாதேஷ் கைவிட்டுவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.