கேரளாவில் பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை!

கேரளாவில் பாஜக பிரமுகர் ரஞ்சித் சீனிவாசனை கொலை செய்த வழக்கில் 15 பேருக்கு ஆழப்புழா நீதிமன்றம் இன்று மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் அவர்கள் அனைவரும் தூக்கிலிடப்பட உள்ளனர்.

இந்தியாவை பொறுத்தமட்டில் தூக்கு தண்டனை என்பது மிகவும் அரிதாகவே வழங்கப்பட்டு வருகிறது. குற்றத்தின் கொடூரம், சித்ரவதை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்க இடமின்றி நிரூபிக்கப்பட்டால் மட்டுமே தூக்கு தண்டனை என்பது விதிக்கப்பட்டு வருகிறது. அதில் பலர் தூக்கு தண்டனைகளில் இருந்து தப்பித்து விடுகிறார்கள். முதலில் கீழ் கோர்ட்டு தூக்கு தண்டனை வழங்கினாலும் கூட அவர்கள் மேல்முறையீடு, ஜனாதிபதியிடம் கருணை மனு வழங்குவதன் மூலம் தூக்கு தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனை கைதியாக மாறிவிடும் நிகழ்வுகளும் இந்தியாவில் நடந்து வருகின்றன.

இதனால் இந்தியாவை பொறுத்தமட்டில் தூக்கு மூலம் மரண தண்டனைகளை நீதிமன்றம் வழங்குவதும், அதனை நிறைவேற்றுவது என்பதும் மிகவும்அரிதானதாகவே உள்ளது. இருப்பினும் அவ்வப்போது குற்றத்தின் தீவிரத்தை பொறுத்து நீதிமன்றம் தூக்கு தண்டனைகளை விதித்து வருகிறது. அந்த வகையில் தான் கேரளாவில் பாஜக பிரமுகர் கொலை வழக்கில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐயுடன் தொடர்புடைய 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது கேரளா மாநிலம் ஆழப்புழாவை சேர்ந்தவர் ரஞ்சித் சீனிவாசன். வழக்கறிஞரான இவர் பாஜகவில் ஓபிசி அணியின் தலைவராக இருந்தார். கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி அவரது குடும்பத்தினர் கண்முன்னே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நிஜாம், அஜ்மல், அனூப், எம்டி அஸ்லாம், சலாம், அப்துல் கலாம், சஃபாருதீன், முன்ஷாத், ஜசீப், நவாஸ், ஷெமீர், நசீர், ஜாகீர் உசேன், ஷாஜி மற்றும் ஷாம்னாஸ் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்த வழக்கு ஆழப்புழா மாவட்டம் மாவெலிகாராவில் உள்ள கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அவர்கள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் 15 பேருக்கு மரண தண்டனை வழங்கி இன்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இந்த உத்தரவு மூலம் இந்தியாவில் ஒரே வழக்கில் அதிகமானவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட வழக்குகளில் இது டாப் 3ல் இடம்பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் முதலிடத்தில் அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கு உள்ளது. அதாவது கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி அகமதாபாத்தில் தொடர்ந்து 22 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்தன. 70 நிமிடங்கள் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 56 பேர் பலியான நிலையில் 230 பேர் படுகாயமடைந்தனர். இந்தியாவையே இந்த சம்பவம் உலுக்கியது. இந்த குண்டு வெடிப்புக்கு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது. இதுதொடர்பாக 77 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கடந்த 2022 பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கப்படது. அதில் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் ஒரே வழக்கில் அதிகமானவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இதுதான் முதலிடத்தில் உள்ளது.

முன்னதாக முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து பூவிந்தவல்லி தடா நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அகமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கை தொடர்ந்து ராஜிவ் காந்தி வழக்கு இந்த லிஸ்ட்டில் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதற்கு அடுத்தப்படியாக 15 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் 3வது பெரிய மரண தண்டனை வழக்காக பாஜக பிரமுகர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கு பார்க்கப்படுகிறது.