இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த நிதிஷ் குமார், அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் கைகோர்த்துள்ளார். நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்து முதல் முறையாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
லோக் சபா தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் முனைப்பில் பாஜக தேர்தல் வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது. இதேபோல் இந்த முறை பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணி உருவாகியது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி என பல கட்சிகள் ஒன்றிணைந்தது. இதில், இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் பிகார் முதல்வர் நிதிஷ் குமார். நாடு முழுக்க உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கினர். இந்த கூட்டணியை உருவாக்கிய முக்கிய நபர்களில் ஒருவராக நிதிஷ் குமார் இருந்தார். ஆனால், திடீர் திருப்பமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு “இந்தியா” கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக உடன் கை கோர்த்தார்.
இது இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியா கூட்டணியை முன்னின்று ஒருங்கிணைத்தாலும் தனக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று நிதிஷ்குமார் கருதியதாக சொல்லப்பட்டது. குறிப்பாக இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து ஆலோசனையின் போது நிதிஷ்குமார் பெயரைப் பரிசீலனை செய்துள்ளனர்.
இருப்பினும், ஒருங்கிணைப்பாளராக யாரைப் போடலாம் என்பது குறித்து மம்தா பானர்ஜியுடன் ஆலோசிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியதே நிதிஷ் குமாரை கோபத்தில் தள்ளியுள்ளது. இதுபோன்ற அதிருபதி காரணமாக இந்தியா கூட்டணியில் இருந்து விலகும் முடிவை நிதிஷ்குமார் எடுத்ததாக சொல்லப்படுகிறது.
நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்து கருத்து எதுவும் கூறாமல் இருந்த ராகுல் காந்தி முதல் முறையாக இன்று மவுனம் கலைத்துள்ளார். பிகாரில் இரண்டாவது நாளாக நடைப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதீஷ் குமார் குறித்து விமர்சனம் செய்துள்ளார். ராகுல் காந்தி பேசியதாவது:-
நிதீஷ் குமார் ஏன் கூட்டணியில் இருந்து விலகினார் என்பது எனக்கு புரிகிறது. பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி அவரிடம் நேரடியாக கூறினேன். காங்கிரஸும், ராஷ்டிரிய ஜனதா தளமும் இணைந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நிதீஷ் குமாரை வற்புறுத்தினோம். ஆனால், இந்த கணக்கெடுப்பு பாஜகவிடையே பயத்தை உண்டாகியது. அவர்கள் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரானவர்கள். இதனால், பாஜக நிதிஷ் குமாருக்கு பின்வாசலைத் திறந்துவிட்டுள்ளது.
பிகாரிலுள்ள பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அனைத்து துறைகளிலும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. மகாகத்பந்தன் என்னும் பிகாரின் மகா கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் இடதுசாரிகளுடன் காங்கிரஸ் துணை நிற்கும்.
மக்களிடையே போரை மூட்டிவிட்ட பாஜக ஆளும் மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் நரேந்திர மோடி இன்னும் நேரில் சென்று சந்திக்கவில்லை. உங்களுக்கு அனைத்து சமூக நீதியையும் வழங்குவது இந்தியா கூட்டணியின் பொறுப்பு. அதற்கு நிதிஷ் குமார் எங்களுக்கு தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.