நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்து புகை குண்டு வீசிய வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் எதிர்க்கட்சி தலைவர்களை வழக்கில் சிக்க வைக்கும் நோக்கத்தில் அவர்களின் பெயர்களை கூறச்சொல்லி உடலில் மின்சாரம் பாய்ச்சியதாக நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. டிசம்பர் 13ம் தேதி நடந்த திடீரென்று லோக்சபாவின் பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 பேர் குதித்தனர். அவர்கள் மஞ்சள் நிற புகையை வெளியேற்றும் ஸ்பிரே மற்றும் கலர் புகை குண்டுகளை வீசினர். அதேபோல் நாடாளுமன்றத்தின் வளாகத்தில் பெண் உள்பட 2 பேர் இதேபோல் கலர் புகை குண்டுகளை வைத்து பீதியை ஏற்படுத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் கர்நாடகாவின் மைசூரை சேர்ந்த டி மனோ ரஞ்சன் (வயது 35), சாகர் சர்மா, ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்த நீலம் (42), அமோல் ஷிண்டே (25) என்பது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பீகாரை சேர்ந்த லலித் ஜா மற்றும் மகேஷ் குமாவாத் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தீவிரவாத ஒழிப்பு படையினர் மற்றும் டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் அவர்கள் 6 பேருக்கும் உண்மை கண்டறியும் பாலி கிராஃப் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தான் அவர்களின் நீதிமன்ற காவல் இன்று முடிவுக்கு வந்தது. இதையடுத்து அவர்களின் நீதிமன்ற காவலை வரும் மார்ச் 1ம் தேதி வரை இன்று டெல்லி பாட்டியாலா கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது. இந்த வேளையில் கைதானவர்களில் 5 பேர் தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் ‛‛அரசியல் தலைவர்களின் பெயர்களை கூறும்படி உடலில் மின்சாரம் பாய்ச்சி போலீசார் துன்புறுத்தல் செய்கின்றனர். மேலும் பாலி கிராஃப் சோதனையின்போதும் அரசியல் தலைவர்களின் பெயர்களை கூறும்படி மிரட்டல் விடுக்கின்றனர். வெற்று பேப்பரில் கையெழுத்திடும்படி வலியுறுத்துகின்றனர். மேலும் செல்போன் மற்றும் வலைதள பக்கங்களில் பாஸ்வேர்டுகளை கூறும்படி துன்புறுத்துகின்றனர்” என தெரிவித்துள்ளனர்.
இந்த புகாரை கூடுதல் செசன்ஸ் நீதிபதி ஹர்தீப் கவுர் கருத்தில் எடுத்து கொண்டார். டெல்லி உயர்நீதிமன்றம் சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கும்படி டெல்லி போலீசாருக்கு உத்தரவிட்டது. அதோடு புகார் தொடர்பான விசாரணையை பிப்ரவரி மாதம் 17 ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.