லோக்சபா தேர்தலில் மீண்டும் மோடி வென்றால் இந்திய அரசியல் சாசனமே இருக்காது என்று திமுக எம்பி ஆ ராசா பேசியுள்ளார்.
கோவை மாவட்டத்தை அடுத்துள்ள மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற வளர்ச்சி பணிகளைத் தொடக்க விழாவில் திமுக எம்பி ஆ ராசா கலந்து கொண்டார். சிறுமுகை பகுதியில் நடந்த இந்த நிகழ்வில் அவர் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இந்தக் கூட்டத்தில் பேசிய ஆ ராசா கூறியதாவது:-
நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுகிறேனா.. இல்லையா என்பது குறித்த விவாதத்தை எல்லாம் ஒதுக்கி வைத்து விடலாம். இது ஏதோ ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் இல்லை. இந்த நாடாளுமன்றத் தேர்தல் தான் அரசியல் சட்டத்தை நாம் வைத்துக் கொள்ளப் போகிறோமா அல்லது தூக்கி எரியப் போகிறோமா என்பதை முடிவு செய்யும் தேர்தல்.. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பிரதமர் மோடி வெற்றி பெற்றால் இந்திய அரசியல் சாசனம் இருக்காது.. மதச்சார்பின்மை இருக்காது. உச்ச நீதிமன்றம் இருக்காது. நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு வேலை இருக்காது. அதன் பிறகு அதிபர் ஆட்சி முறை வந்துவிடும்.
இன்றை அனைத்துத் துறைகளிலும் அவர்கள் மதவாதத்தைப் புகுத்திவிட்டனர். நடுநிலையான பத்திரிகைகளை எல்லாம் கூட தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் இப்போது ஒருவித மாய ஆட்சியை மத வெறி ஆட்சியைத் தான் நடத்தி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.