வீட்டு வேலைக்கு வந்த பட்டியலினத்தை சேர்ந்த இளம்பெண்ணை துன்புறுத்திய வழக்கில், ஜாமீன் கேட்டு பல்லாவரம் திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவின் மீது பதிலளிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், காவல்துறைக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் (திமுக) மகன் ஆண்டோ மதிவாணன் திருவான்மியூரில் வசித்து வருகின்றார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இவரது வீட்டில் ஒரு பட்டியலின இளம்பெண்ணை வேலைக்கு வைத்துள்ளனர். இப்பெண் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சார்ந்தவர். 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்வானவர். இப்படி இருக்கையில் ஆண்டோ மதிவாணன் வீட்டில் பணிக்கு வந்த இரண்டே நாட்களில் அவர் வேலை செட்டாகவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் அவரை அனுப்பாமல் தொடர்ந்து வேலை வாங்கியுள்ளனர்.
இது குறித்து அப்பெண் கூறுகையில், “என்னை அடித்து துன்புறுத்தினார்கள். செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டார்கள்” என்று கூறி உடலில் ஏற்பட்டுள்ள காயத்தை காண்பித்தார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவிய நிலையில், “ஆண்டோ மதிவாணன் அவரது துணைவியார் மெர்லின் ஆகிய இருவரையும் எஸ்சி எஸ்டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, வழக்கு விசாரணையை விரைந்து நடத்தி முடித்து, குற்றவாளிகளுடைய தண்டனையை உறுதி செய்திட வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உளவியல் ரீதியான கலந்தாய்வுகளை ஏற்பாடு செய்திட வேண்டும். அவருடைய உயர்கல்விக்கான செலவுகளை அரசே ஏற்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் அனைத்து நிவாரணங்களையும் அரசு உடனடியாக வழங்கிட வேண்டும்” என அரசியல் கட்சிகளும், சமூக செயற்பாட்டு அமைப்புகளும் வலியுறுத்தின.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மர்லினா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 25ம் தேதி தனிப்படை போலீசாரால் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட இருவரும், சென்னை வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிப்ரவரி 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜாமீன் கோரி இருவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில், பணிப்பெண்ணை துன்புறுத்தியதாகவும், தாக்கியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது குடும்ப உறுப்பினர் போல பணிப்பெண்ணையும் நடத்தியதாகவும், அவரை கல்லூரியில் சேர்த்து அதற்கான கட்டணத்தையும் தாங்களே செலுத்தியதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி D. V. ஆனந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.என்.கணேஷ், காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆகியோர் ஆஜரானார்கள். அப்போது இருவரின் ஜாமீன் மனுவுக்கு காவல்துறையும், பாதிக்கப்பட்ட பெண்ணும் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி இரண்டாம் தேதிக்கு ஒத்திவைத்தார்.