சென்னை ஜிஎஸ்டி துணை ஆணையர் பாலமுருகனை சஸ்பெண்ட் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அண்மையில், பாலமுருகன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்யக்கோரி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், கண்ணையன். ஏழை விவசாயிகளான இவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரம் விவாதங்களை ஏற்படுத்தியது. விவசாயிகளின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் பாஜகவின் சேலம் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் குணசேகரன் என்பவர் தொடர்ந்து அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து குணசேகரனுக்கு எதிராக இவர்கள் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கிற்கு இடையேதான் இரண்டு விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அத்துடன் சம்மனில் சாதி பெயரும் இடம் பெற்று இருந்தது. இது பெரும் சர்ச்சையான நிலையில் அமலாக்கத்துறை நடவடிக்கையை கைவிட்டது.
இதனிடையே, இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் அல்லது அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாலமுருகன், குடியரசுத்தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய குடும்பத்தில் இருந்து வந்ததால், விவசாயிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கையை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று தனது கடிதத்தில் பாலமுருகன் குறிப்பிட்டு இருந்தார்.
அதுபோக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாலமுருகன், மணிப்பூரில் நடைபெற்ற பழங்குடியினர் பெண்களின் நிலைமை பார்க்கும்பொழுது தான் இந்தியன் என சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கிறது என்றும் பேட்டி அளித்து இருந்தார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்யக்கோரி, குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பணியில் இருந்து கொண்டே ஐஆர்எஸ் பாலமுருகன் அரசை விமர்சித்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஜிஎஸ்டி துணை ஆணையர் பாலமுருகனை சஸ்பெண்ட் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாளை ஓய்வு பெற இருந்த நிலையில் பாலமுருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.