மணிப்பூர் மாநிலத்தில் இப்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து பல நாட்கள் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதால், நாடு முழுக்க பரபரப்பு ஏற்பட்டது. வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர அம்மாநிலத்தில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். ராணுவ கண்காணிப்பு மூலம் அம்மாநிலத்தில் நிலைமை மெல்ல சீராக துவங்கியது. எனினும், அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே தான் வருகிறது.
இந்தச் சூழலில் தான், மணிப்பூர் மாநிலத்தில் இப்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அங்கு நேற்று இரு குழுக்களுக்கிடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், மணிப்பூர் மாநில பாஜக தலைவர் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள கோட்ருக் கிராமத்தில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. குறைந்தது ஒருவரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
பாஜகவின் இளைஞரணி பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் முன்னாள் தலைவரான மனோகர்மாயும் பரிஷ் சர்மா என்பவரும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.