பெண் ஆய்வாளரை தாக்கிய திமுக நிர்வாகியை கைது செய்யாதது ஏன்?: அண்ணாமலை!

“மூன்று முறை முன்ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்ட நிலையில், பெண் காவல் ஆய்வாளரை தாக்கிய திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரனை காவல் துறையினர் கைது செய்யாமல் இருப்பது ஏன்?” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவண்ணாமலையில் என் மண், என் மக்கள் யாத்திரையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் அரசியல் மாற்றம் வர வேண்டும். தமிழகத்தில் குடும்ப அரசியல், சாதி, ஊழல் மற்றும் அடாவடி என்ற நாற்காலியின் 4 கால்கள் உள்ளன. இந்த 4 கால்களும் பெயர்த்தெறியப்பட வேண்டும்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல் ஆய்வாளரை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன் உள்ளிட்டோர் தாக்கி உள்ளனர். காவல் துறையை நோக்கி கையை உயர்த்தினால் சமுதாயம் முன்னேறாது. இவர்களது முன் ஜாமீன் மனு 3 முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு சட்டத்தை மீறி வணிக வளாகம் கட்டுவதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்த காவல் துறையினர், பெண் காவல் ஆய்வாளரை தாக்கிய திமுக நிர்வாகி ஸ்ரீதரனை ஏன்? கைது செய்யவில்லை.

நானும் காவல் துறையைச் சேர்ந்தவன் என்பதால், பெண் காவல் ஆய்வாளரை தாக்கியதை ஏற்க மனம் மறுக்கிறது. உங்களது ரத்தமாக உள்ள பெண் காவல் ஆய்வாளர் மீது கை வைத்துள்ளதற்கு காவல் துறை என்ன சொல்ல போகிறது. கம்பீரமான சீருடையை அணிந்து எப்படி நடக்க முடிகிறது. ஐபிஎஸ் பதவி என்பது மிகப்பெரிய உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம். ஆனால், பல்லை பிடுங்கிய நபராக திருவண்ணாமலை எஸ்பி இருக்கிறார். ஊழல் அமைச்சரிடம் கைக்கட்டி நிற்கின்றார். இதே நிலை, உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றிருந்தால், தாக்கிய நபரின் 2 கைகளையும், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்திய நாத் எடுத்திருப்பார். காவல் துறையின் கைகளை கட்டிப்போட்டுவிட்டு திமுக ஆட்சி நடத்துகிறது.

தமிழகத்தில் 5 முறை ஆட்சி செய்த திமுக, ஐந்து அரசு மருத்துவக் கல்லூரிகளை மட்டும் திறந்தது. அதேநேரத்தில் 17 தனியார் மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தது. ஆனால், பிரமதர் மோடியின் 9 ஆண்டு பாஜக ஆட்சியில் ஓரே நேரத்தில் தமிழகத்தில் 12 அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதித்தது. தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கிடையாது என தெரிவித்து விட்டது.

தமிழத்தில் 4 பாஜக எம்எல்ஏக்களும், தங்களது தொகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளியை தொடங்க கோரிக்கை விடுத்தனர். மத்திய அரசும் அனுமதி வழங்கியது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் தடையில்லா சான்று வழங்க மறுக்கிறது. தமிழகத்தில் ஒரு நவோதயா பள்ளி மற்றும் பிஎம் ஸ்ரீ என்ற மத்திய அரசின் பள்ளிகளை தொடங்க திமுக அரசு அனுமதிக்கவில்லை.

அமைச்சர் எ.வ.வேலு, பன்னாட்டு பள்ளியை நடத்துகிறார். பணக்காரர் வீட்டு பிள்ளைகளுக்கு ஒரு கல்வி, ஏழை வீட்டு பிள்ளைகளுக்கு ஒரு கல்வியா?. நவோதயா பள்ளியை தொடங்க அனுமதி அளித்தால் 100 பள்ளிகள் உடனடியாக திறக்கப்படும். இப்பள்ளிகளில் படிக்க கட்டணம் கிடையாது. அதன் பிறகு மாணவர்களின் சோதனை பரிசோதிக்கலாம். எ.வ.வேலு நடத்தும் பள்ளி மாணவரை விட சிறந்த மாணவரா, நவோதயா பள்ளி மாணவர் திகழ்வார். இல்லையென்றால் அரசியலை விட்டு சென்று விடுகிறேன். இந்த சவாலை ஏற்க தயாரா?.

கோயில் கருவறையில் பிராமணர்களை தவித மற்றவர்கள் செல்ல அனுமதி இல்லை என்பதால் சனாதனத்தை எதிர்ப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 6 மாதத்துக்கு முன்பு கூறினார். அயோத்தியில் பால ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்த போது, இவர் என்ன சங்காராச்சாரியரா, ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு என கேள்வி கேட்கின்றார். இதுதான் அரசியல் பித்தலாட்டம். தமிழக அரசியல் களத்தில் பிராமனர்களை வில்லனாக சித்தரித்து காண்பித்துள்ளனர்.

விழா மேடையில் பேசும் அமைச்சர் உதயநிதி, நான் ஒரு கிறிஸ்துவர் என கூறுகின்றார். ஆனால், பாஜகவை மதவாத கட்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகின்றார். பொய்யை மட்டும் மூலதனாக வைத்து திமுக ஆட்சி நடத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.