மதுரையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.90 கோடி சர்வதேச சந்தை மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து மதுரையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக குஜராத் கடல் பகுதியில் ஈரானில் இருந்து கப்பல் மூலம் கடத்திவரப்பட்ட 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 150 கிலோவுக்கு மேலாக மெத்தப்பெட்டமைன் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சர்வதேச போதைக் கும்பலைச் சேர்ந்த 5 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். இதில் தமிழகத்தில் இருந்தும் போதைப்பொருள் கடத்தலுக்கு தொடர்புடையவர்கள் இருப்பது தெரியவந்தது. தமிழகத்தில் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் 5 பேரை டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்த தேடியபோது ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் தலைமறைவாகினர். எனினும், ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு அவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த வாரம் மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தமிம் அன்சாரி என்பவரது வீட்டிலும் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னையைச் சேர்ந்த அருண் மற்றும் அன்பு என்ற இருவர் போதைப்பொருளை வைத்துச் சென்றதாக கூறினார். அதனடிப்படையில் இருவரையும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தேடி வருகின்றனர்.
இதனிடையே இன்று (மார்ச் 1) அதிகாலை மதுரை ரயில் நிலையத்தில் பொதிகை எக்ஸ்பிரஸ்சில் 90 கோடி சர்வதேச சந்தை மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்திய நபர் கைது செய்யப்பட்டார். பிள்ளமன் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது.
ரயிலில் மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மத்திய வருவாய்பிரிவு புலனாய்வுத்துறை அதிகாரிகள் (DIRECTOR REVENUE INTELLGENGE ) நேற்று சென்னையில் இருந்து புறப்பட்ட பிள்ளமன் பிரகாஷ் என்பவரை பின் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். சென்னையில இருந்து செங்கோட்டைக்கு செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு பேக்குடன் சென்னையை சேர்ந்த பிள்ளமன் பிரகாஷ் புறப்பட்டுள்ளார். இதனையடுத்து புலனாய்வுத்துறை அதிகாரிகளும் பிரகாஷை ரயிலில் பின் தொடர்ந்தனர்.
அதிகாலை 4.20 மணிக்கு மதுரை வந்த பொதிகை ரயிலில் இருந்து இறங்கிய பிரகாஷை சுற்றிவளைத்த அதிகாரிகள் அவரை மடக்கி பிடித்து இரண்டு பேக்குகளையும் சோதனை செய்தனர். அதில் இருந்த 15 பொட்டலங்களில் 15 கிலோ பவுடர் மற்றும் 15 கிலோ திரவ வடிவிலான பொருள் என 30 கிலோ மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மத்திய வருவாய்பிரிவு புலனாய்வுத்துறை இயக்குநரக அதிகாரிகள் பிரகாஷை பிடித்து மதுரை ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் காலை 5 மணி முதல் 12 மணி வரை என 7 மணி நேரம் விசாரணை நடத்திய பின்னர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு அடுத்தகட்ட விசாரணைக்காக பிரகாஷை அழைத்துச் சென்றனர்.
பிரகாஷிடம் நடத்திய விசாரணையில் சென்னை தேனாம்பேட்டை கண்ணதாசன்நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் இவருடன் தொடர்புகொண்ட ஒரு மர்ம நபர் ஒருவர் இதனை ரயிலில் மதுரை எடுத்துசெல்ல வேண்டும் பணம் தருவதாக கூறியதன் அடிப்படையில் எடுத்து வந்துள்ளதாகவும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளளது. பிரகாஷிடம் கைப்பற்றிய 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.90 கோடி வரை இருக்கலாம் என முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.
போதைப்பொருளை மதுரையில் இறக்க முற்பட்டதன் மூலம், மதுரையில் விநியோகம் செய்ய முயற்சித்தாரா அல்லது ராமேஸ்வரம் கொண்டு சென்று இலங்கைக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டாரா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சர்வதேச அளவில் இருக்கக்கூடிய போதைப் பொருட்களை ஒரே இடத்தில் வைக்காமல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரித்து பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்திலும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.