“அதிமுக மீதான அச்சத்தால் திமுக அவசர அவசரமாக தொகுதி பங்கீட்டை முடிக்கிறது. இது ஒரு தோல்வி பயம்தான்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடத்தில் கூறியதாவது:-
அதிமுக மீதான அச்சத்தால் திமுக அவசர அவசரமாக தொகுதி பங்கீட்டை முடிக்கிறது. இது ஒரு தோல்வி பயம் தான். எந்தெந்த கட்சிகள் எங்கு செல்லும் என்பது இன்னும் பத்து நாட்களில் தெரியவரும். அதுவரை இடைவேளை. செல்வப்பெருந்தகையின் கருத்துக்களை பார்க்கும் போது, பிரேக்கிங் ஆகப் போவதாகதான் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக நாங்கள் யாரிடமும் சென்று கெஞ்சவில்லை.
எங்கள் தலைமையில் நல்ல கூட்டணி அமையும். அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. திமுக எங்களுக்கு பிடிக்காத அரசு, மக்கள் விரோத அரசு. தலைமைச் செயலகத்திலேயே வெடிகுண்டு வீசப் போகிறார்கள் என மிரட்டல் வந்திருக்கிறது. தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம், போதை கலாச்சாரங்கள் என சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. திமுக அரசு ஆளுகின்ற தமிழகம் மிக மோசமான மாநிலமாக இருக்கிறது.
மத்திய அரசின் நிதிலிருந்து ஒரு லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழகத்துக்கு கிடைத்திருக்கும் நிதி ரூ.7000 கோடி தான். ஆனால் உத்தரப் பிரதேசத்துக்கு 25 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கொடுத்திருக்கிறார்கள். ஆனால் நமது மாநிலத்திலிருந்து பல லட்சம் கோடி, மத்திய அரசுக்கு நிதியாக செல்கிறது. ஆனால் நமக்கு கிடைத்ததோ யானை பசிக்கு சோளப்பொறி தான். இந்த அளவுக்கு ஒரு பெரிய துரோகத்தை மத்திய அரசு செய்யக் கூடாது. வரி பகிர்வில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. வெண்ணெய் ஒரு கண்ணிலும், சுண்ணாம்பு ஒரு கண்ணிலும் என வடக்கு, தெற்கு வரி பகிர்வில் செயல்படுகிறது. வரி பகிர்வு என்பது சீரானதாக இருக்க வேண்டும். தமிழகத்தை வஞ்சிக்கின்ற ஆட்சியாக திமுக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.