வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தாம் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வு விசாரணை நடத்த தடை கோரிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்தது.
2001-2006 அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி சொத்து குவித்ததாக 2006-ல் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் 2012-ல் சிவகங்கை நீதிமன்றத்தால் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்து தாமாக முன்வந்து (சூமோட்டோ) விசாரிப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார். 11 ஆண்டுகளுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறு ஆய்வு செய்வதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, பா.வளர்மதி ஆகியோர் மீதான வழக்குகளையும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறு விசாரணைக்கு தாமாக முன்வந்து எடுத்தார். இதில் அமைச்சர் ஐ.பெரியசாமி, வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து மறு விசாரணைக்கு உத்தரவிட்டு அண்மையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
இதனிடையே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் சூமோட்டோ விசாரணைக்கு தடை விதிக்க கோரி முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். பா.வளமர்தியின் மனுவை ஏற்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதே பாணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் உச்சநீதிமன்றம் இன்று ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவை அதிரடியாக டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது. இது ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு பெரும் பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.