அமரன், ரஸாக்கர் படங்களை தடை செய்ய வேண்டும்: எஸ்டிபிஐ!

முஸ்லிம் வெறுப்பை விதைக்கும் அமரன், ரஸாக்கர் திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னையில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலகக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலகக்குழு கூட்டம் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது, மாநில பொதுச்செயலாளர்கள் அகமது நவவி, நிஜாம் முகைதீன், அச.உமர் பாரூக், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நஸூருத்தீன், மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக், மாநில பொருளாளர் அமீர் ஹம்சா, மாநில செயற்குழு உறுப்பினர் ஷஃபிக் அஹம்மது ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி, வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளதை எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலகக்குழு வரவேற்கிறது. ஸ்டெர்லைட் ஆலை வெளியிடும் கொடிய நச்சுப்புகையால் தூத்துக்குடி பகுதி மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாக்கப்பட்டு பெரும் துன்பங்களை சந்தித்து வந்தனர். இதற்கு எதிராக பல்லாண்டுகளாக மக்கள் போராடி வந்தனர். எஸ்.டி.பி.ஐ. கட்சி துவக்கம் முதலே ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வந்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்கிற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்றது. இதற்காக போராடிய அனைத்து போராட்டக் குழுவினருக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், மக்கள் நல அமைப்புகளுக்கும், மக்கள் கண்காணிப்பகம் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளுக்கும், அரசியல் கட்சியினருக்கும், நீதிமன்றத்தில் திறம்பட வாதாடிய வழக்கறிஞர்களுக்கும் உள்ளிட்ட அனைத்து வழக்கறிஞர்களுக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலகக்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து, ஆலையை உடனடியாக அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு தாமதமின்றி துவக்க வேண்டும். ஆலையை அகற்றி, அந்த இடத்தை தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும். இதற்காக போராடி உயிர்த் தியாகம் செய்த போராளிகளுக்கு தமிழக அரசு நினைவுத் தூண் அமைத்திட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

2. இந்தியாவில் வாழக்கூடிய சிறுபான்மை முஸ்லிம் சமூகம் ஒரு மிகப்பெரிய வாழ்வியல் நெருக்கடியை சந்தித்து வரும் சூழலில், முஸ்லிம் சமூகத்தை குற்றப்படுத்தும் வகையிலும், அவர்களை இந்து சமூகத்தவர்களுக்கு எதிரானவர்களாகவும், தேசத்திற்கு எதிரானவர்களாகவும் காட்டும் வகையில், பொய்யையும், அவதூறையும் கலந்து திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. காஷ்மீர் ஃபைல்ஸ், புர்கா, கேரளா ஸ்டோரி வரிசையில், தற்போது கமல்ஹாசன் அவர்களின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் என்கிற படமும், பாபி சிம்ஹா நடிப்பில் ரஸாகர் என்கிற படமும் வெளிவர இருக்கிறது. இந்த திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் பெரும் விவாதமாகி வருகின்றன. முஸ்லிம்களின் கலாச்சாரம், பண்பாடுகள் குறித்த தவறான பார்வையை வேண்டுமென்றே வெளியிடுவது, அவர்களின் தேசப்பற்றை கேள்விக்குட்படுத்துவது, முஸ்லிம்கள் குறித்து பொது சமூகத்திடம் அச்சத்தை விதைப்பது, வரலாறு என்கிற பெயரில் புனைவுகள் மூலம் முஸ்லிம் வெறுப்பை விதைப்பது போன்றவை இதுபோன்ற திரைப்படங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே, கமல்ஹாசன் அவர்களின் விஸ்வரூபம் திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருந்த காரணத்தால், முஸ்லிம்களின் உணர்வுகளை மதித்து அப்போதைய தமிழக முதல்வர் அம்மா அவர்கள் அந்த திரைப்படம் வெளிவர தடைவிதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் முஸ்லிம்கள் மீது வெறுப்பை கக்கும் வகையில் கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பில் அமரன் என்கிற படம் தயாரிக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. ஆகவே, தமிழக முதல்வர் அவர்கள் இந்த விசயத்தில் முஸ்லிம்களின் உணர்வுகளை மதித்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களைப் போன்று, முஸ்லிம் வெறுப்பு திரைப்படமான அமரன் மற்றும் ரஸாகர் திரைப்படங்களுக்கு தடை விதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற திரைப்படங்கள் சங்பரிவார்கள் முன்னெடுக்கும் வெறுப்பு பிரச்சாரத்துக்கு வலுசேர்க்கவே திட்டமிட்டு தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டு வருகின்றன. இதன்மூலம் சமூகங்களுக்கிடையே வன்மத்தை, மதமோதலை உருவாகவும், அமைதியை சீர்குலைக்கவும் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறுபான்மை முஸ்லிம் சமூகம் சந்திக்கும் பல்வேறு நெருக்கடிகள் ஏராளமாக உள்ளபோதும், அதுபற்றி பேசாமல் அவதூறை பரப்பி, அமைதியை சீர்குலைக்கும் இதுபோன்ற பொய்யான, அரசியல் நோக்கம் கொண்ட பரப்புரை படங்கள் தடை செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் இந்த திரைப்படங்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டும். தமிழக அரசு இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு தவறும் பட்சத்தில் இந்த திரைப்படங்கள் வெளியாகும் திரையரங்குகளை முற்றுகையிட்டு எஸ்டிபிஐ கட்சி போராடும் என்பதையும் இந்த செயலகக் குழு கூட்டம் தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறது.

3. கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையமானது பயணிகளின் பயன்பாட்டுக்கு மிகப்பெரும் சிரமங்களை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து இந்த பேருந்து நிலையத்தை அடைவதற்கான வசதிகள் குறைவு, காலவிரயம், பேருந்து நிலையத்திற்குள்ளேயே மக்கள் அலைக்கழிக்கப்படும் சூழலால் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மக்கள் சிரமங்களை கருத்தில்கொண்டு அதனை விரைந்து சரிசெய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்திய போதும், குறைபாடுகளை சரிசெய்ய அரசு போதிய கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. ஆகவே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பில் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலகக்குழு கேட்டுக்கொள்கிறது.

4. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்காக 11 கிராமங்களை சேர்ந்த விளைநிலங்களை கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக, அறவழியில் போராடி வரும் விவசாயிகள் உள்ளிட்ட போராட்டக் குழுவினர் மீதான அரசின் அடக்குமுறை கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கக் கூட அனுமதி மறுக்கப்பட்டு விவசாயிகள், பெண்கள் கைது செய்யப்படுவது கவலையளிக்கின்றது. செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்திற்காக விவசாயிகள் விளைநிலம் கையகப்படுத்தப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என விவசாயிகளும், பொதுமக்களும் அச்சம் தெரிவிக்கும் நிலையில், மக்களின் உணர்வுகளை மதித்து, விவசாயத்தை பாதிக்கும் இந்த திட்டத்தை வேறு பகுதிக்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேப்போல், பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள், நீர்நிலைகள், குடியிருப்பு பகுதிகளை அழித்து, தமிழக அரசால் மேற்கொள்ளப்பட உள்ள பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக, மக்களின் நியாயமான கோரிக்கைகளை புறந்தள்ளி, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் நிலம் எடுப்பதற்கான அரசாணை வெளியிட்டுள்ள தமிழக அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. ஆகவே, வளர்ச்சி என்கிற பெயரில் விளைநிலங்களை அழித்து மேற்கொள்ளப்படும் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் அல்லது மாற்றுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலகக்குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.