அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண விருந்துக்காக ஜாம் நகர் விமான நிலையத்துக்கு 10 நாள் சிறப்பு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசை மதுரை எம்பி சு வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. ஆனந்த் அம்பானி தன்னுடன் படித்த தோழி ராதிகா மெர்சன்ட்டை மணக்கிறார். திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் மார்ச் 1, 2, 3 ஆகிய தேதிகளில் குஜராத்தின் ஜாம்நகரில் நடைபெறுகிறது. ஜாம்நகரில் அம்பானிக்கு சொந்தமான அம்பானி க்ரீன் எனர்ஜியில் திருமணம் நடைபெறுகிறது. இதற்காக ஜாம் நகரே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளுக்கு பில்கேட்ஸ், மார்க் சூகர்பெர்க் உள்ளிட்ட உலக பணக்காரர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். திரைப்பிரபலங்கள், டோனி போன்ற விளையாட்டு நட்சத்திரங்கள் என அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்க பலரும் இந்தியாவுக்கு வருகை தந்து கொண்டு இருக்கிறார்கள்.
சர்வதேச நிகழ்வுகளுக்கு எந்தவித குறைவும் இல்லாமல் ஜாம் நகரில் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திருமணத்தின் முந்தைய நிகழ்ச்சிக்காக ஜாம் நகர் வண்ண விளக்குகளால் மின்னுகிறது. இந்த விழாவுக்கு 1000 க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் வருகை தந்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வரும் முக்கிய பிரமுகர்கள் வர ஏதுவாக ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை என மொத்தம் 10 நாட்கள் சர்வதேச அந்தஸ்து விமான நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்கள் ஜாம்நகர் விமான நிலையத்தில் தரையிறங்க முடியும். அதேபோல் ஜாம்நகரில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் புறப்பட்டு செல்ல முடியும். தற்போது சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதால் வெளிநாடுகளில் இருந்து வரும் மிக முக்கிய பிரமுகர்கள் நேரடியாக விமான நிலையத்திற்கே வருகை தருகிறார்கள்.
இதனிடையே, அம்பானி வீட்டு திருமணத்திற்காக ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து கொடுக்கப்பட்டு இருப்பதற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அந்த வகையில், மதுரை மக்களவை தொகுதி எம்பி வெங்கடேசன், இந்த விவகாரத்தை கையில் எடுத்து கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரை எம்பி வெங்கடேசன் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:-
மோடி அரசின் மெகா “மொய்” முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண விருந்துக்காக ஜாம் நகர் விமான நிலையத்துக்கு 10 நாள் சிறப்பு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து. 6 விமானங்கள் இறங்கி ஏறுகிற இடத்தில் 140 விமான சேவைக்கு ஏற்பாடு. ஆனால் மதுரையின் பல ஆண்டு சர்வதேச விமான நிலையக் கோரிக்கை மட்டும் இன்று வரை ஈடேறவில்லை. தமிழ்நாட்டுக்கு எதற்கு 4 வது சர்வதேச விமான நிலையம் என்று கேள்வி கேட்டவர்கள் தான் இவர்கள். இவ்வாறு சு வெங்கடேசன் எம்பி பதிவிட்டுள்ளார்.