தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை திருமாவளவனுடன் சந்திப்பு!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள், விசிக தலைவர் தொல்.திருமாவளவனை சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில் அண்ணன் திருமாவின் வெற்றிக்கு காங்கிரஸ் கட்சி உழைக்கும் என்று கூறியிருப்பது பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழக அரசியல் களத்தில் இள ரத்தம் பாய்ச்சும் வகையில் உத்வேகம் கொண்ட தலைவர்கள் முன்னிறுத்தப்பட்டு வருகின்றனர். திமுகவில் உதயநிதி ஸ்டாலின், பாஜகவில் அண்ணாமலை, தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த வரிசையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சமீபத்தில் இணைந்துள்ளார். இவர் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.

அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை நேற்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, அருமை அண்ணன் திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் எந்த தொகுதியில் போட்டியிடுகிறாரோ, அவருடைய வேட்பாளர் போட்டியிடுகிறாரோ, அந்த தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள் அனைவரும் தீவிரமாக செயல்படுவர் என்று கூறினார்.

அதாவது, திருமாவளவனை வெற்றி பெறச் செய்ய காங்கிரஸின் கைகள் உழைக்கும் என்று தெரிவித்துள்ளார். இது ஆரோக்கியமான கூட்டணியை காட்டுகிறது. ஏற்கனவே திருமாவளவன் மீதான பழைய பாசமும் வெளிப்பட்டிருக்கிறது. செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சியில் தான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறார்.

அதற்கு முன்பு பல்வேறு கட்சிகளில் சில ஆண்டுகள் மட்டும் பயணித்தார். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அடங்கும். இக்கட்சி சார்பில் கடலூர் மாவட்டம் மங்களூர் சட்டமன்ற தொகுதியில் 2006 தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற கதையும் உண்டு. அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்து வேறு கட்சியில் சேர்ந்து விட்டார்.

2010 முதல் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் திருமாவளவனை சந்திக்கும் மற்றும் உரையாடும் வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. தற்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றுள்ளார். எனவே இரண்டு முக்கியமான கட்சி தலைவர்கள் என்ற முறையில் திருமாவளவன் உடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதில் பழைய பாசமும் வெளிப்பட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது. தேர்தலில் நேரத்தில் இப்படியான சந்திப்புகள் கட்சியின் அடிமட்டம் வரை எதிரொலிக்கும். இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் இணைந்து பணியாற்றுவதற்கு உறுதுணையாக இருக்கும்.