உத்தரப்பிதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில், 74 தொகுதிகளில் போட்டியிட பாஜக முடிவெடுத்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மற்ற 6 தொகுதிகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அப்னா தல், ஆர்எல்டி கட்சிகள் தலா 2 தொகுதிகளையும், எஸ்பிஎஸ்பி, நிஷத் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிலாம் என்று கூறப்படுகிறது.
நாட்டில் அரசியல் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு அதிக எண்ணிக்கையில் எம்.பி.க்களை அனுப்பும் உத்தரப் பிரதேச மாநிலத்தில், எந்த ஒரு தேசியக் கட்சியினரும் மிகப்பெரிய அளவில் விவாதமோ ஆலோசனையோ நடத்தாமல் தொகுதிப் பங்கீட்டை முடிக்க முடியாது என்பது நிதர்சனம்தானே. மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற மோடியின் லட்சியத்தை அடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு, புதுடெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜகவின் மத்திய தேர்தல் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. மாநிலத்தில், பாஜகவின் பரப்பை அதிகரிப்பதோடு, கூட்டணி கட்சிகளுக்கும் சில தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பது சவாலாகவே இருந்திருக்கும்.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான், பாஜகவின் மத்திய தேர்தல் குழுவினர், ஒரு வழியாக, உத்தரப்பிரதேசத்தில் 74 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், ஆறு தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
6 தொகுதிகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அப்னா தளம், ஆர்எல்டி கட்சிகள் தலா 2 தொகுதிகளை ஒதுக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், அப்னா தளம் ஐந்து தொகுதிகளைக் கேட்டுள்ளது. எனவே, இரண்டு தொகுதிகளைக் கொடுத்து சமரசம் செய்ய வேண்டியதிருக்கும். எஸ்பிஎஸ்பி, நிஷத் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிலாம் என்று கூறப்படுகிறது.
மக்களவைத் தோ்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தோ்தல் தேதியை தோ்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனிடையே, தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளா்களை இறுதி செய்யும் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. ஆளும் பாஜகவும் தோ்தல் முன்னேற்பாடு பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோா் பல்வேறு மாநில பாஜக தலைவா்களுடன் தொகுதிகள் மற்றும் வேட்பாளா்களை இறுதி செய்வது தொடா்பாக கடந்த சில நாட்களாக ஆலோசனை மேற்கொண்டு வந்தனா். இந்த நிலையில் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 பேர் கொண்ட பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. இதனை டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலர் வினோத் தாவ்டே வெளியிட்டுள்ளார். அதில், வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் மக்களவைத் தேர்தலில் 34 மத்திய அமைச்சர்கள் மீண்டும் பாஜக சார்பில் களமிறங்குகின்றனர். அதன்படி மத்திய அமைச்சர்களான அமித் ஷா- காந்திநகர், ராஜ்நாத் சிங்-லக்னௌ, மன்சுக் மாண்டவியா-போர்பந்தர், ஜிதேந்திர சிங்-உதம்பூர், ஸ்மிருதி இரானி-அமேதி, ராஜீவ் சந்திரசேகர்-திருவனந்தபுரம், சர்பானந்தா சோனேவால்- திப்ரூகர், ஜோதிராதித்ய சிந்தியா-குணா, கிரண் ரிஜிஜூ- அருணாசல் மேற்கு தொகுதி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். மேலும் ராஜஸ்தானின் கோட்டாவில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும், திருச்சூரில் மலையாள நடிகர் சுரேஷ் கோபியும் வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.
முதற்கட்ட பட்டியலில் 28 பெண்கள், 27 பட்டியலினத்தவர், 18 பழங்குடியினர், 57 ஓபிசி பிரிவினர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 80 மக்களவைத் தொகுதிகளைக்கொண்ட உத்திரப் பிரதேச மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கம் 26, மத்தியப் பிரதேசம் 24, குஜராத், ராஜஸ்தானுக்கு தலா 15, கேரளம்-12, அசாம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் தலா 11, தெலங்கானா 9, தில்லி 5, ஜம்மு-காஷ்மீர் 2, உத்தரகண்ட் 3, அருணாச்சல் 2, கோவா, திரிபுரா தலா ஒரு தொகுக்கும் வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.