கர்நாடகத்தில் மாநிலங்களவைத் தேர்தலின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கர்நாடகத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற்றது. அதில், மாநிலங்களவை உறுப்பினர்களில் ஒருவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் சையது நசீா் ஹுசேன் வெற்றி பெற்றார். இதுகுறித்த அறிவிப்பு வெளியான நிலையில் சையது நசீா் ஹுசேன் ஆதரவாளர்கள் சிலர் அவரை வாழ்த்தி முழக்கம் எழுப்பினர். அப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவான முழக்கங்களையும் அவர்கள் எழுப்பியதாக கூறப்பட்டது.
வெற்றியைக் கொண்டாடும் வகையில் சையது நசீா் ஹுசேன் ஆதரவாளா்கள் சிலா் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று அவரது ஆதரவாளா்கள் முழக்கமிட்டதாக புகாா் எழுந்தது. இதுதொடா்பான காணொலி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது. இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பியதற்கு கர்நாடக பாஜக தலைவர்கள் உள்பட முன்னாள் முதல்வரும் மஜத தலைவருமான குமாரசாமி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரத்தை கண்டித்து கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக, மஜத எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, சர்ச்சைக்குரிய சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றம் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.