“66 நாடுகளை மகிழ்ச்சியுடன் கடந்த தம்பதி வட இந்தியாவில் 7 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது, எழுப்பிய அழுகுரல் மோடியின் காதுகளில் கேட்கவில்லையா?” என அமைச்சர் மனோதங்கராஜ் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்பெயின் – பிரேசிலைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் ஆசியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்தியா வந்துள்ள அந்த தம்பதியினர், கடந்த வாரம் ஜார்க்கண்ட் மாநிலத்துக்குள் சென்றனர். கடந்த வெள்ளி (மார்ச்.01) அன்று டும்கா மாவட்டத்துக்கு சென்ற அவர்களை மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து அவர்களை கொடூரமாக தாக்கி, அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்தப் பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியாவில் உள்ள பிரேசில் தூதரகம் வெளியிட்ட அறிக்கையையடுத்து அந்த மர்ம நபர்களில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களையும் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து அமைச்சர் மனோதங்கராஜ் தனது எக்ஸ் தளத்தில், “66 நாடுகளை மகிழ்ச்சியுடன் கடந்த தம்பதி வட இந்தியாவில் 7 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது எழுப்பிய அழுகுரல் மோடியின் காதுகளில் கேட்கவில்லையா?. இது தேசத்தின் அவமானம். இந்த காட்டுமிராண்டி செயல்தான் பிரதமர் மோடி பேசும் கலாச்சார பெருமையா?” எனப் பதிவிட்டுள்ளார்.