“ஒரு பேய் ஆட்சி செய்தால் அந்த நாடு எப்படியிருக்கும் என்பதற்கு இன்றைய திமுகவின் ஆட்சியே சாட்சி. கொள்ளை, மணல் கடத்தல், சாராயம் விற்பனை, கஞ்சா விற்பவர்களுக்குதான் தமிழகத்தில் தற்போது முதல் மரியாதை கிடைக்கிறது” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.
பிரதமர் மோடி இந்த ஆண்டில் 4-வது முறையாக இன்று தமிழகம் வந்தார். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட விரைவு பெருக்கி உலை திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
பிரதமர் மோடி சென்னைக்கு பலமுறை வந்திருந்தாலும், இம்முறை தன்னுடைய குடும்பத்தை பார்க்க வந்திருக்கிறார். மோடிக்கு குடும்பம் இல்லை என்று பிகாரில் லாலு பிரசாத் யாதவ் சொல்கிறார். மோடி தனிமனிதன் என்கிறார். 142 கோடி மக்கள் நாம் தான் மோடியின் குடும்பம். கோபாலபுரம் குடும்பம் மட்டும் தான் இவர்களின் கண்களுக்கு தெரியும். பிகாரில் தொடர்ச்சியாக ஒரே குடும்பம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியது லாலு பிரசாத் யாதவ் குடும்பம். 17 வயதில் வீட்டை பிரிந்து, இந்தியா முழுவதும் சுற்றி திரிந்து இன்றைக்கு கிட்டதட்ட ஒரு யோகியாக தன் வாழ்க்கை முழுவதும் மக்களுடைய முன்னேற்றுத்துக்காக அர்ப்பணித்த மோடிக்கு 142 கோடி மக்களும் தான் குடும்பம்.
கோபாலபுர குடும்பத்தையும் நான்காவது தலைமுறைகளாக அரசியலில் இருக்கும் திமுகவின் சிற்றரசர்களையும் அரசியலில் இருந்து அகற்ற வேண்டியது நேரமிது. இந்தத் தேர்தல் நமக்கு அருமையான வாய்ப்பு. இன்றைக்கு காஞ்சிபுரத்தில் நெய்த பட்டு சால்வை அணியப்பட்டது. இந்த சால்வையில் சிறுத்தை அச்சிடப்பட்டுள்ளது. இன்றைக்கு மக்களுக்கு மட்டுமல்ல, வாய் பேச முடியாத ஜீவன்களுக்காகவும் பிரதமர் மோடி பாடுபட்டு கொண்டிருக்கிறார். 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது 7910 சிறுத்தைகள் இருந்தன. அதுவே இன்று 13,874 சிறுத்தைகள் உள்ளன. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே சால்வையில் சிறுத்தை அச்சிடப்பட்டுள்ளது. சுயசார்பு பாரதம் திட்டம் கொண்டுவந்ததற்காக பனை மர பொருட்கள் பரிசளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலை அடிப்படையில் இருந்து மாற்றியவர் பிரதமர் மோடி. ஒரு நேர்மையான அரசியலை இந்திய ஜனநாயகத்தில் கொடுக்க முடியும் என்று காட்டியுள்ளார். அவரின் வெற்றியில் யாருக்கும் சந்தேகம் இல்லை. மக்களவைத் தேர்தலில் உறுதியாக 400 தொகுதிக்கும் மேல் வெல்வார். 400+ தொகுதிகளை வெற்றிபெறும் போது தமிழகத்தில் இருந்து 39 எம்பிக்களை அனுப்பிவைக்க வேண்டும். இதற்கு சபதம் ஏற்போம்.
தமிழகத்தில் இன்றைக்கு நடக்கக் கூடிய திமுக ஆட்சியை, “பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்று பாஞ்சாலி சபதத்திலேயே மகாகவி பாரதி சொல்லியிருக்கிறார். ஒரு பேய் ஆட்சி செய்தால் அந்த நாடு எப்படியிருக்கும் என்பதற்கு இன்றைய திமுகவின் ஆட்சியே சாட்சி. கொள்ளை, மணல் கடத்தல், சாராயம் விற்பனை, கஞ்சா விற்பவர்களுக்கு தான் தமிழகத்தில் தற்போது முதல் மரியாதை கிடைக்கிறது. சாதாரண மக்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை. இந்த ஆட்சியை அகற்ற வேண்டிய நேரமும் காலமும் வந்துவிட்டது.
அடுத்த 60 நாட்கள் இந்திய அரசியலில் முக்கியமான நாட்கள். நேற்றைய மந்திரி சபை கூட்டத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டத்தை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டங்களை கையில் வைத்துள்ளார் பிரதமர். அதற்கான அடித்தளத்தை 2024 தேர்தலில் அமைக்க தயாராக இருக்கிறார். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.