ராமேஸ்வரம் கோயில் கட்டண விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். குறிப்பாக அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க லட்சக்கணக்கான பொது மக்கள் ராமேஸ்வரத்தில் திரள்வது வழக்கம். அண்மையில் ராமர் கோயில் திறப்புக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி கூட ராமேஸ்வரம் வந்து அக்னி தீர்த்த கிணறுகள் மற்றும் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டுச் சென்றார்.
இந்த நிலையில் ராமநாதசாமி கோயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ராமநாதசாமி திருக்கோயில் மூலம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பக்தர்கள் வேண்டுகோளின் படியும், பக்தர்களின் வசதிக்காகவும் முன்னோர்களுக்கு பரிகார பூஜை செய்ய கட்டண சீட்டுகள் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சேபனை இருந்தால் பொது மக்கள் வரும் 20ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தில தர்பணத்திற்கு 200 ரூபாயும், பிண்ட பூஜைக்கு 400 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிண்டப் பூஜை செய்ய கூட கோயில் நிர்வாகத்திற்கு பணம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னோர்களுக்கு நாம் காட்டும் பாசத்தின், மரியாதையின் வெளிப்பாடாக, மரித்தவர்களின் மறுமை வாழ்வுக்காக இறைவனை வேண்டி வைக்கப்படும் பிண்டத்திலும் பணம் பார்க்க வேண்டும் என்ற கார்ப்பரேட் மனப்பான்மை மூலம் இந்த திமுக அரசு ஒரு மிகத் தவறான முன்னுதாரணத்தை விதைப்பது எந்தவகையிலும் ஏற்புடையது அல்ல என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், “இந்த முறையற்ற உத்தரவை உடனே திரும்பப் பெற்று, இறைவனுக்கான சேவையை முறைப்படுத்தவும், ஆலய மேம்பாடு மற்றும் பராமரிப்பக்காண கட்டணங்களைத் தவிர வேறெந்த கட்டணமும் வசூலிக்க வேண்டாம் என்று திமுக அரசையும் முதல்வரையும் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இதுதொடர்பாக தற்போது கருத்து கேட்பு மட்டுமே நடந்துள்ளதாகவும், கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்றும், மக்களின் கருத்துகளை கேட்ட பிறகு அது தொடர்பாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறநிலையத் துறை தரப்பில் கூறுகிறார்கள்.