“அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பயன்கள் உரிய முறையில் மக்களை சென்றடைகிறதா என்பதை உறுதி செய்வதற்காக “நீங்கள் நலமா?” திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் ரூ.656 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். அதேபோல், புதிதாக கட்டப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-
மண் வளமும், நெல் வளமும் மிகுந்த மாவட்டம் டெல்டா. காவிரி பாசனத்தால் வேளாண்மை செழிப்போடு இருக்கும் மாவட்டம் மயிலாடுதுறை. புதிய மாவட்டங்கள் அறிவிப்பது பெரிதல்ல, உள்கட்டமைப்பை ஏற்படுத்தி தர வேண்டும். திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் மயிலாடுதுறை மாவட்டத்தை அறிவித்து ஒன்றரை ஆண்டுக்குள் ஆட்சியர் அலுவலகம் கட்டியுள்ளோம். மாவட்டங்களுக்கான உட்கட்டமைப்புகள் திமுக ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டது. 2 ஆண்டுகளில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 28 லட்சம் இளைஞர்கள் திறன் பயிற்சி பெற்றனர். அறிவிப்புகளை அரசாணைகளாக மாற்றும் அரசு திமுக அரசு. அரசாணைகளை உரிய முறையில் நடைமுறைக்கு வருவதை உறுதிசெய்யும் அரசு திராவிட மாடல் அரசு.
திருவோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் 2 நாட்கள் முன் உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திருவோணம் புதிய தாலுகா இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. திருவோணம் வட்டம் உருவாக்கப்படும் என்று 2023-ல் சட்டப்பேரவையில் அறிவித்ததை செயல்படுத்தியுள்ளோம்.
மயிலாடுதுறையில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்களின் மனசாட்சியாக செயல்படுகிறது திராவிட மாடல் ஆட்சி. மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மீன்இறங்குதளம் ரூ.30 கோடி செலவில் மேம்படுத்தப்படும். முத்துப்பேட்டையில் ரூ.10 கோடி மதிப்பில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும். திருவாரூரில் ரூ.2.5 கோடியில் உலர்மின் நிலையம் அமைக்கப்படும். மயிலாடுதுறையில் ரூ.5 கோடி மதிப்பில் புதிய நூலகம் அமைக்கப்படும். கடல் நீர் உட்புகுவதை தடுக்க ரூ.44 கோடி மதிப்பில் கடைமடை நீர் ஒழுங்கிகள் அமைக்கப்படும்.
தேர்தல் அறிவிக்க இருப்பதால் அடிக்கடி பிரதமர் மோடி தமிழகம் வரத் தொடங்கி இருக்கிறார். தமிழகத்துக்கு நன்மை செய்துவிட்டு, நாம் வைக்கும் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டு பிரதமர் வர வேண்டும். அப்படி இல்லாமல், தமிழக மக்களின் வரிப்பணமும், வாக்கு மட்டும் போதும் என்று நினைத்து தமிழகத்துக்கு வருகிறார் மோடி. அண்மையில் ஏற்பட்ட 2 இயற்கை பேரிடர்களுக்கு ஒரு பைசா கூட நிதி தரவில்லை. ஆனால் தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள ஆதரவு கேட்டு மட்டும் தமிழகத்துக்கு வருகிறார். தமிழக மக்கள் ஒருபோதும் மோடியை பார்த்து ஏமாற மாட்டார்கள். தமிழகத்தின் உரிமைக்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபடும் திராவிடல் மாடல் அரசின் பக்கமே மக்கள் நிற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “நீங்கள் நலமா?” என்ற புதிய திட்டத்தை வரும் 6ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்க இருக்கிறேன் என அறிவித்தார். அப்போது, “அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பயன்கள் உரிய முறையில் மக்களை சென்றடைகிறதா என்பதை உறுதி செய்வதற்காக “நீங்கள் நலமா?” திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், தலைமை செயலாளர், அனைத்து துறைச் செயலாளர்கள் மக்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கருத்துகளைக் கேட்டறிவார்கள். முதல்வராகிய நானே நேரடியாக மக்களை தொடர்புகொண்டு பேசுவேன் எனத் தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.