மக்களின் கவனத்தை முதல்வர் ஸ்டாலின் திசை திருப்ப முயற்சி செய்கிறார்: அண்ணாமலை!

போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்காமல் மக்களின் கவனத்தை முதல்வர் ஸ்டாலின் திசை திருப்ப முயற்சி செய்வதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி திமுக அரசு மீது பகிரங்கமாக குற்றம் சாட்டினார். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் ஆதரவில், தமிழ்நாட்டில் போதை பொருட்கள் தங்கு தடையின்றி அனைத்து இடங்களிலும் புழங்கி வருகிறது என்பதுதான் எனது மனதை அரித்து எடுக்கும் கவலையாக உள்ளது. உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தை அழிக்க நினைக்கும் இப்படிப்பட்ட கட்சி குறித்து நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக மிக அவசியமானது. இன்றைய குழந்தைகள் மட்டும் அல்ல; நாளைய தலைமுறையும் இதனால் பாதிக்கப்படும். நீங்கள் பாஜகவை பலப்படுத்தினால் தமிழ்நாட்டின் எதிரிகள் மீதான நடவடிக்கை மேலும் விரைவுபடுத்தப்படும். இது மோடியின் கியாரண்டி என்றும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசிய சட்ட அமைச்சர் ரகுபதி, லோக்சபா தேர்தலுக்காக தமிழ்நாடு அரசு மீது பிரதமர் மோடி பழிபோடுவதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. இந்தியா முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் அதிக அளவில் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளது. தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடப்படுவதில்லை. எதிர்கால தலைமுறையினரை காக்க வேண்டும் என்பதற்காக போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. போதைப்பொருள் கடத்தும் பாஜகவினரை முதலில் அண்ணாமலை தடுக்கட்டும் என்றும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-

பிப்ரவரி 24 அன்று கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 2000 கோடி மதிப்பிலான சூடோபீட்ரைன் போதைப்பொருளைக் கடத்திய ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச போதைப்பொருள் மாஃபியாவின் மன்னனாக திமுக செயல்தலைவரும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் பெயர் அடிபட்டுள்ளது. பிப்ரவரி 28 ஆம் தேதி – தமிழகத்திற்கு மாற்றப்பட்டு கொண்டு செல்லப்பட வேண்டிய ரூ.1200 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் என்சிபியால் இடைமறித்து கடலில் கைப்பற்றப்பட்டன. மார்ச் 1ஆம் தேதி மதுரையில் வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தால் ரூ. 180 கோடி மதிப்பிலான மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இன்று, மார்ச் 5 ஆம் தேதி – ராமேஸ்வரத்தில் வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தால் ரூ. 108 கோடி மதிப்புள்ள ஹஷிஷ் பறிமுதல் செய்யப்பட்டது.

நமது பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக அரசைக் கண்டித்தும், போதைப் பொருள் ஒழிப்புப் போராட்டத்தில் தமிழக மக்களுக்கு உறுதியளித்தார். சர்வதேச போதைப்பொருள் வர்த்தகத்தில் திமுக பிரமுகர் ஒருவரின் தொடர்பு செய்தியாகி 10 நாட்கள் ஆகிறது, ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின், 2ஜி விசாரணையின் போது தனது தந்தையும், முன்னாள் முதல்வருமான திரு கருணாநிதி செய்தது போல் மக்களின் கவனத்தை திசை திருப்பவே துடித்துள்ளார். எத்தனை காலம் கேள்விகளைத் தவிர்த்து அமைதியாக இருப்பீர்கள் மு.க ஸ்டாலின். இவ்வாறு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.