தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியுடன் பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட பிரதான கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. சமத்துவ மக்கள் கட்சியுடன் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் பேசி வருவதாக கடந்த சில நாட்களுக்குமுன் திருநெல்வேலியில் சரத்குமார் தெரிவித்திருந்தார். அதற்கு முன்னதாக பாளையங்கோட்டையில் சமத்துவ மக்கள் கட்சியின் பிரம்மாண்ட பொதுக் கூட்டமும் நடத்தப்பட்டிருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டிருந்ததால் அக்கட்சியினர் மத்தியில் உற்சாகம் காணப்பட்டது.
இந்நிலையில், பாஜவுடன் சமத்துவ மக்கள் கட்சி தேர்தல் கூட்டணி உடன்பாடு செய்துள்ளதாக சரத்குமார் இன்று அறிவித்தார். கூட்டணியில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும், எந்த தொகுதியில் சரத்குமார் போட்டியிடுவார் என்பது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் தெளிவாகிவிடும். சரத்குமார் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது கட்சியினரின் விருப்பம். இத்தொகுதியில் அவர் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது என்று திருநெல்வேலியைச் சேர்ந்த கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால் திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட அக்கட்சியின் மாநில துணை தலைவரும், சட்டப் பேரவை குழுவின் தலைவருமான நயினார் நாகேந்திரன் கடந்த சில வாரங்களுக்கு முன்னரே தேர்தல் பணிகளை தொடங்கியிருந்தார். திருநெல்வேலி சந்திப்பில் தேர்தல் அலுவலகத்தையும் திறந்து வைத்திருந்தார். திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் மத்திய இணையமைச்சர் வி.கே. சிங்கை அழைத்துவந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி என்று பல்வேறு வகையிலும் தேர்தல் பணிகளை மேற்கொண்டிருந்தார்.
பாளையங்கோட்டையில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் நயினார் நாகேந்திரனும் ஒருவர். இதனால் அவரே இத் தொகுதியில் போட்டியிடுவார் என்று அக்கட்சியினர் எதிர்பார்த்தனர். இந்நிலையில்தான் பாஜக கூட்டணியில் சமக இணைந்திருப்பதால் திருநெல்வேலி தொகுதியை சமகவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஆனால் திருநெல்வேலி தொகுதியை பாஜக விட்டுக்கொடுக்காது என்றும் நயினார் நாகேந்திரன் நிச்சயம் போட்டியிடுவார். சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து சரத்குமார் போட்டியிடவே வாய்ப்புகள் அதிகமுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் திரு.அரவிந்த் மேனன் அவர்கள் பிப்ரவரி 28 ஆம் தேதி என்னை நேரில் சந்தித்து, பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் ஒருமித்த கருத்துகள் உடன்பட்டதால் நேற்று மத்திய அமைச்சர் எல். முருகன் அவர்கள், தேசிய செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹெச்.ராஜா அவர்கள், பாஜக தமிழக பொறுப்பாளர் மற்றும் தேசியச் செயலாளர் திரு.அரவிந்த்மேனன் அவர்கள் ஆகிய மூவரும் குழுவாக வந்து என்னை சந்தித்து கூட்டணி குறித்து மீண்டும் பேசினார்கள்.
இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தேறியது. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்டக்குழு, மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஏற்கெனவே எனக்கு பாராளுமன்றத் தேர்தலில் முடிவெடுக்கும் அதிகாரத்தினை வழங்கி, எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில், நாடு வளம் பெற, ஒற்றுமையுணர்வு ஓங்கிட, மீண்டும் நல்லாட்சி அமைந்திட மூன்றாவது முறையாக நரேந்திர மோடி அவர்கள் பாரத பிரதமராக தேர்ந்தெடுக்க பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளேன். மற்ற விபரங்களை இன்னும் ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.