‘கரும்பு விவசாயி’ சின்னம் கேட்டு சீமான் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!

வரும் லோக்சபா தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தை எப்படியாவது பெற்றே தீருவது என்ற உறுதியுடன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது நாம் தமிழர் கட்சி.

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, 2016 சட்டமன்றத் தேர்தல் மூலம், தேர்தல் அரசியலில் களமிறங்கியது. அந்த தேர்தலில் மெழுகுவர்த்தி சின்னத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதன்பிறகு வந்த 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது. இந்த லோக்சபா தேர்தலிலும் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டு வந்தது நாம் தமிழர் கட்சி. இந்நிலையில், லோக்சபா தேர்தலில் கர்நாடகவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். இதையடுத்து நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. எனினும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்க மறுத்துவிட்டது தேர்தல் ஆணையம்.

இதனைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என சீமான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். அப்போது, முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பாரதீய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இதனையடுத்து, எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் டெல்லி உயர் நீதிமன்றம், சீமான் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.