செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் மார்ச் 11 தேதி வரை நீட்டிப்பு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மார்ச் 11 தேதி வரை நீட்டித்துள்ளது. கடந்த 9 மாத காலமாக புழல் சிறையில் அடைபட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் 24வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர். இதய பாதிப்பு ஏற்படவே ஆபரேசன் செய்யப்பட்டது. ஒரு மாத காலம் மருத்துவமனையில் ஓய்வெடுத்த செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

தீபாவளிக்கு வீட்டிற்கு வந்து விடுவார்.. பொங்கலுக்கு வீட்டிற்கு வந்து விடுவார் என்று அவரது ஆதரவாளர்களும் உறவினர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஆனாலும் அவருக்கு ஜாமீன் கிடைத்தபாடில்லை. செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் தலைமறைவாக இருப்பதால் ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று அமலாக்கத்துறை முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இலாகா இல்லாத அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படவே தனது அமைச்சர் பதவியை கடந்த வாரம் ராஜினாமா செய்தார்.

இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து இன்றைய தினம் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர் படுத்தப்பட்டார். காணொலி காட்சி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 11ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன்மூலம் 24வது முறையாக அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.