போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து போதைப் பொருள் பறிமுதல்களும் போதைப் பொருள் மாபியா செயல்பாடுகளும் மக்களைப் பெரும் அச்சத்துக்கு ஆளாக்கியுள்ள நிலையில், இன்று(நேற்று) ராமேஸ்வரம் கடல் பகுதியில் மேலும் 108 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் என்ற செய்தி, தமிழகத்தை இந்த தி.மு.க. அரசு சுடுகாடாக மாற்றி வருகிறதோ என்ற பயத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தை போதைப் பொருள் மொத்த விற்பனைக் கிடங்காக இந்த அரசு மாற்றியுள்ளதாக நான் ஏற்கனவே கூறிய நிலையில், தற்போது போதைப் பொருள் தயாரிப்பு மையமாகவே தமிழகம் மாறிவிட்டதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
நிர்வாகத் திறனென்றால் என்னவென்றே தெரியாத அரசின் பொம்மை முதல்-அமைச்சர், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், போதைப்பொருள் மாபியா தலைவன் ஜாபர் சாதிக் எந்தவித பயமும் இன்றி தமிழகத்தில் சர்வசாதாரணமாக செயல்படுவதற்கு தி.மு.க.வில் கட்சி அங்கீகாரமும் அளித்திருப்பது வெட்கக்கேடானது!
அரசின் மெத்தனத்தாலும், ஊக்குவிப்பிலும் தமிழகத்தில் குவிந்து கிடக்கும் போதைப் பொருட்களை முழுவதுமாக பறிமுதல் செய்து, தமிழகத்தின் கடல் எல்லைகளை போதைப்பொருள் புழங்காவண்ணம் பாதுகாக்குமாறு போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன். கடைசி துளி போதைப்பொருள் ஒழிகின்ற வரை அ.தி.மு.க.வின் குரல் போதைப்பொருட்கள் மற்றும் இதனை புழக்கும் மாபியாவுக்கு எதிராக ஒலித்துக்கொண்டே இருக்கும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.