அரசின் திட்டங்களுக்கு குடும்பத்தினர் பெயரை சூட்டும் வழக்கம் பாஜக அரசுக்கு இல்லை: அண்ணாமலை

திமுகவை போல அரசின் திட்டங்களுக்கு குடும்பத்தினர் பெயரை வைத்துக் கொள்ளும் வழக்கம் பாஜக அரசுக்கு இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆட்சிக்கு வந்ததில் இருந்து, குழுக்கள் மேல் குழுக்கள் மட்டுமே அமைத்துக் கொண்டிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது மத்திய அரசின் திட்டங்களின் பெயரை மட்டும் மாற்றிச் செயல்படுத்தும் திமுக அரசின் திட்டங்கள் முறையாகச் செயல்படுகிறதா என்பதைக் கண்டறிய, ‘நீங்கள் நலமா’ என்று ஒரு புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார். மக்கள் யாரும் நலமாக இல்லை என்பதை புதிதாக ஒரு திட்டம் அறிவித்து, தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில்தான் தமிழக முதல்வர் இருக்கிறார். இது தமிழக மக்களுக்கு துரதிருஷ்டகரமானது.

மக்களைத் தேடி மருத்துவம் என்று திமுக பெயர் வைத்திருக்கும் திட்டமானது, பிரதமர் நரேந்திர மோடி அரசால் கொண்டு வரப்பட்டு தமிழகத்தில் கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதலே செயல்படத் தொடங்கிய மக்கள்தொகை அடிப்படையிலான தொற்றா நோய்கள் பரிசோதனை திட்டமாகும். இதற்கான நிதியை மத்திய அரசு வழங்குகிறது.

மேலும், ‘முதல்வரின் முகவரி’ திட்டத்துக்கும், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்துக்கும், ‘நீங்கள் நலமா’ திட்டத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம், இலவச கழிப்பறைகள் திட்டம், உர மானியம், பயிர் காப்பீடு திட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், சமையல் எரிவாயு மானியம் என பொதுமக்கள் நேரடியாகப் பயன்பெறும் மத்திய அரசின் திட்டங்கள் ஏராளம். அவை எல்லாம் அரசின் திட்டங்களாகவே செயல்படுத்தப்படுகின்றனவே தவிர, திமுகவைப் போல, தங்கள் குடும்பத்தினர் பெயர்களை திட்டங்களுக்கு வைத்துக் கொள்ளும் வழக்கம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.