மார்ச் 16ல் நேரில் ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்!

மார்ச் 16-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் புதிதாக சம்மன் அனுப்பியுள்ளது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்புடைய பணமோசடி வழக்கு விசாரணைக்கு ஆஜராகக் கோரி அனுப்பிய சம்மன்களை தொடர்ந்து நிராகரித்தது தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள புதிய மனுவினைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த சம்மனை அனுப்பியுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) பிரிவு 50-ன் கீழ் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் எண்கள் 4 – 8 டெல்லி முதல்வர் மதிக்கவில்லை என்று அமலாக்கத்துறை தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கை கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் (ஏசிஎம்எம்) திவ்யா மல்ஹோத்ரா மார்ச் 16ம் தேதி விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளார்.

முன்னதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகும்படி அனுப்பியிருந்த 8 சம்மன்களையும் நிராகரித்து இருந்தார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டுவதற்காக அமலாக்கத்துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளை மோடி அரசு பயன்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

அமலாக்கத்துறை கடைசியாக பிப். மாத கடைசியில் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. அதில் மார்ச் 4ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி கூறியிருந்தது. அந்த சம்மனை நிராகரித்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால், அது சட்டவிரோதமானது என்று தெரிவித்திருந்தார். என்றாலும், மார்ச் 12ம் தேதிக்கு பின்னர் காணொலி கட்சி வாயிலாக விசாரணைக்கு ஆஜராகத் தயார் என்றும் தெரிவித்திருந்தார். இந்தக் கோரிக்கையை நிராகரித்த அமலாக்கத்துறை, காணொலி மூலமாக விசாரணை நடத்த விதிகள் இல்லை என்பதால் நேரில் தான் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

டெல்லியில் தற்போது கைவிடப்பட்ட புதிய மதுபானக் கொள்கை ஊழல் பணமோசடி வழக்குத் தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோரை அமலாக்கத்துறை ஏற்கனவே கைது செய்திருந்தது. இந்த வழக்குத் தொடர்பாக தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை பலமுறை அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயரைக் குறிப்பிட்டுள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மதுபானக்கொள்கை தயாரிப்பின் போது டெல்லி முதல்வருடன் தொடர்பில் இருந்ததாக விசாரணை அமைப்புக் குற்றம்சாட்டியுள்ளது.

இதனிடையே சம்மன் தொடர்பாக மத்திய அரசைச் சாடியுள்ள கெஜ்ரிவால், “பாஜகவில் சேர மறுப்பவர்கள் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள். சத்தியேந்திர ஜெயின், மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோர் பாஜகவில் இணைந்தால் அவர்களுக்கு நாளையே ஜாமீன் வழங்கப்படும். நானும் தற்போது பாஜகவில் இணைந்தால் எனக்கு அனுப்பப்படும் சம்மன்களை நிறுத்த முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சிக் கூறுகையில், “ஒருவர் எந்தக் காரணத்துக்காக விசாரணைக்கு அழைக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் பல முறைக் கூறியுள்ளது. துரதிருஷ்டவசமாக மத்திய அரசு நீதிமன்ற ஆணைகளை பின்பற்ற மறுக்கிறது. தன்னை சட்டத்துக்கு மேலாக கருதுகிறது” என்று தெரிவித்துள்ளது.