ஆளுநர் ஐபிஎஸ் படித்து பாஸ் செய்தாரா இல்லை பார்த்து எழுதி பாஸ் செய்தாரா: சீமான்!

ஆளுநர் ஐபிஎஸ் படித்து பாஸ் செய்தாரா இல்லை பார்த்து எழுதி பாஸ் செய்தாரா என நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது:-

உங்களுக்கு (ஆளுநர்) எதுவும் இல்லை. நீங்கள் வெறுங்கையுடன் வந்தவர்கள். இந்த நிலத்தில் என்னுடையதை எடுத்துக் கொண்டு தன்வயப்படுத்திக் கொண்டவர் நீங்கள். வள்ளுவர் குறித்து ஆளுநர் பேசியிருந்தார். அடுத்தபடியாக வள்ளலாரை தொட்டார். இதைத் தொடர்ந்து தற்போது வைகுண்டர் குறித்து பேசியுள்ளார். இவர்கள் மூவருமே சனாதனவாதிகள் என சொல்றீங்க. இந்த மூவருமே புரட்சி செய்தது ஜாதியையும் சனாதன கொடுமைகளையும் எதிர்த்துதான்! வள்ளலார் சன்மார்க்க மார்க்கத்தை தொடங்கியதே அதற்காகத்தான். தலையில் இருந்து பிறந்தவன் பிராமணன், தோளில் இருந்து பிறந்தவன் ஷத்திரியன், தொடையில் இருந்து பிறந்தவர் வைசியர், காலில் இருந்து பிறந்தவர் சூத்திரர் என்பதை நானே படைத்தேன். இதை நானே நினைத்தாலும் மாற்ற முடியாது என பகவத் கீதையில் இருப்பதாக பதிவு செய்துள்ளீர்கள். ஆனால் வள்ளலாருடைய இதற்கு நேர் எதிர் சிந்தனை. பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என கூறியுள்ளார். அவரை போய் ஆளுநர் சனாதனவாதி என கூறியிருக்கிறார். வள்ளலாரை ஒரு சூப்பர் ஸ்டார் போலவும் ஆளுநர் கூறுகிறார்கள். அய்யா வைகுண்டர் எதிர்த்தது ஜாதிய கொடுமை, வர்ணாசிரம கொடுமை, தீண்டாமையைத்தான்! அவரை போய் சனாதனவாதி என ஆளுநர் சுருக்கி கூறுவது அவருடைய அறியாமையை காட்டுகிறது.

பல முறை நான் ஆளுநரை கேட்டுள்ளேன், நீங்கள் ஐபிஎஸ் படித்து எழுதுனீர்களா, இல்லை பார்த்து எழுதுனீர்களா என! அவருக்கு எதுவுமே தெரியவில்லை. அவர் பேசுவது ஒன்றுமே அர்த்தம் இல்லை. எனவே இவர் பேச்சையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காமல் அப்படியே உதிர்த்து தள்ளிவிட்டு தமிழின மக்கள் போய் கொண்டிருக்கிறார்கள். இல்லாவிட்டால் எத்தனை பெரிய போராட்டம் வெடித்திருக்கும் தெரியுமா?

உலக நாடுகளுக்கு செல்லும் பிரதமர் உலகின் மூத்த மொழி தமிழ் என பிரதமர் பேசியிருக்கிறார். மூத்த மொழி தமிழ் எங்கள் இந்தியாவில் இருப்பது பெருமை என பிரதமர் மோடி சொல்லியிருக்கிறார். புதிதாக கட்டிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் கல்வெட்டு இருக்கிறதே ஒழிய தமிழில் இல்லையே ஏன்? இதற்கு பதிலை பிரதமர் மோடி, அண்ணாமலை சொல்வார்களா? மேகதாதுவில் அணை கட்டாதீர்கள் என நான் போராடலாம். அண்ணாமலை எப்படி போராடலாம். அவர் கட்சி சார்ந்த ஆட்சிதானே மத்தியில் நடக்கிறது. அவர் பேசி நம் கோரிக்கைகளை பெற்றுத் தர வேண்டும் அல்லவா. இவ்வாறு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

அய்யா வைகுண்டரின் 192 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில் அய்யா வைகுண்டர் தோன்றிய காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலம்; சனாதன தர்மத்தை காப்பதற்கே அய்யா வைகுண்டர் தோன்றினார் என ஆளுநர் பேசியிருந்தார். இதற்கு அய்யா வைகுண்டர் தலைமைபதி பால பிரஜாபதி அடிகளார் கண்டனம் தெரிவித்திருந்தார்.