கனிமொழிக்கு பிரதமர் மோடி பற்றி பேச தகுதி கிடையாது: அண்ணாமலை

“தந்தை பெயரை வைத்து வாழ்ந்து வரும் கனிமொழிக்கு பிரதமரை பற்றி பேச தகுதி கிடையாது. கருணாநிதி என்கிற வார்த்தையை தூக்கிவிட்டால் கனிமொழி யார்?” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம் பிரதமர் மோடி பற்றி திமுக எம்.பி கனிமொழி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “கனிமொழி தனது தந்தை கட்டிய வீட்டில் தங்கியிருக்கிறார். கனிமொழி உழைத்து எதாவது சம்பாதித்துள்ளாரா? சொந்தமாக காடு மேட்டில் வேலை செய்து அல்லது விவசாயம் செய்து செய்தவரா கனிமொழி? இல்லை. கருணாநிதியின் மகள் என்கிற பெயரில் ஓசியில் வாழ்கிறார். கனிமொழிக்கு பிரதமரைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. அப்பா பெயரை வைத்து வாழ்ந்து வரும் கனிமொழிக்கு பிரதமரை பற்றி பேசத் தகுதி கிடையாது. கருணாநிதி என்கிற வார்த்தையை தூக்கிவிட்டால் கனிமொழி யார்? கனிமொழி இதுபோன்ற பேச்சுகளை தவிர்க்க வேண்டும். சீன கொடி விவகாரத்தில் தற்காப்பு கொடுத்து பேசும்போதே முழு உடன்பிறப்பாக மாறிவிட்டார் அவர்” என்று ஆவேசமாக பேசினார்.

தொடர்ந்து அளித்த பேட்டியில், “ஜாபர் சாதிக் விவகாரத்தில் டிஜிபியை பலிகடா ஆக்க திமுக முயற்சிக்கிறது. இந்த விவகாரத்தில் திமுகவினர் யாரும் வாய் திறந்து பேசவில்லை. டிஜிபி ஏன் இதைப் பற்றி பேச வேண்டும். இப்படித்தான் கோயம்புத்தூர் கார் குண்டுவெடிப்பிலும் சைலேந்திரபாபுவை வைத்து அறிக்கை கொடுக்க வைத்தது திமுக அரசு” என்றார்.