கொலை வழக்கில் வேறு நீதிமன்றங்களில் சரணடைவது செல்லாது: சென்னை உயர் நீதிமன்றம்!

கொலை வழக்குகளில் சரணடைபவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்குப் பதிலாக, வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் திமுக வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்தவர் ஆராமுதன். இவர் மீது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக காஞ்சிபுரம் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த 5 பேர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தான் சாரணடைய அடைய வேண்டும். வேறு நீதிமன்றங்களில் சரண்டைய முடியாது. எனவே, சத்தியமங்கலம் நீதிமன்றம் சரண்டரை ஏற்றுக்கொண்டதை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி மனுதாக்கல் செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இன்று தீர்ப்பளித்தார். அதில், ‘சம்பந்தப்பட்ட வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதால் அதில் எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை. மேலும், சரணடைவது தொடர்பாக சில வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்து தீர்ப்பளித்துள்ளார். கொலை வழக்குகளில் சரணடைபவர்கள் சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்துக்கு பதிலாக, வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது. சம்பந்தப்பட்ட நீதித்துறை எல்லைக்கு உட்படாத மாஜிஸ்திரேட் முன்பு தாக்கல் செய்யப்படும் மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல. ஒருவேளை யாரேனும் சரணடைந்தால் அவரை சிறையில் அடைக்க குறிப்பிட்ட நீதிமன்றம் உத்தரவிட முடியாது. அவ்வாறு ஒருவர் சரணடையும் நிலையில் குறிப்பிட்ட மாஜிஸ்ட்ரேட் தனது எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து, சரணடையும் நபரை காவலில் எடுக்க உத்தரவிடலாம். இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ் பதியப்படும் வழக்குகளுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும்’ என்று நீதிபதி பிறப்பித்துள்ள தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த தீர்ப்பை உயர் நீதிமன்ற பதிவாளர், தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்து அனுமதி பெற்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் அந்த உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜி. மோகனகிருஷ்ணன் முறையிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்பதனால் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செல்ல உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.