ஆவடியில் நேற்றிரவு ரம்மி விளையாட்டில் தோல்வியாகி ரூ.30 ஆயிரம் பணத்தை இழந்த மன உளைச்சலில் ஒரு காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
விருதாச்சலம் அருகே நாச்சியார்பட்டியை சேர்ந்த விக்கி (27). இவர் ஆவடி காவலர் குடியிருப்பில் தங்கி, மணலியில் காவல் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலைபார்த்து வந்துள்ளார்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களாக விக்கியும் ஆவடி காவலர் குடியிருப்பின் மற்றொரு வீட்டில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருக்கிறது. மேலும், ஓய்வு நேரத்தில் காவலர் விக்கி ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல் செல்போனில் காவலர் விக்கி ரம்மி விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். அப்போது ரூ.30 ஆயிரம் பணத்தையும் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் கடும் மன உளைச்சலுக்கு ஆளான காவலர் விக்கி மதுபோதையில் வீடு திரும்பியுள்ளார். பின்னர் நேற்றிரவு படுக்கையறையில் மின்விசிறி கொக்கியில் காவலர் விக்கி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் திருமுல்லைவாயல் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு காவலர் விக்கியின் சடலத்தை கைப்பற்றி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தன.