ஹிட்லரின் ஆட்சி 10 ஆண்டு காலம்தான் இருந்தது. மத்திய பா.ஜனதா ஆட்சியும் இந்த 10 ஆண்டுகளுடன் முடிவடைகிறது என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், லக்னோவில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த தேர்தலில் அரசியலமைப்பை பாதுகாக்க விரும்புபவர்கள் ஒரு அணியாக உள்ளனர். மறுபுறம், அரசியலமைப்பை முடிவுக்குக் கொண்டு வர விரும்புபவர்கள் உள்ளனர். அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றும் வகையில் இந்த தேர்தல் இருக்கும். இட ஒதுக்கீட்டைக் காப்பாற்றும் வகையிலும், தன் மானத்தை காப்பாற்றும் வகையிலும் இந்த தேர்தல் முடிவு இருக்கும்.
மத்திய பா.ஜனதா அரசுக்கு விடைகொடுக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். 2014-ம் ஆண்டு அதிகாரத்துக்கு வந்தவர்கள். 2024-ம் ஆண்டு ஆட்சியை விட்டு வெளியே செல்கிறார்கள். ஹிட்லரின் ஆட்சி 10 ஆண்டு காலம்தான் இருந்தது. அதற்குமேல் அவரால் ஆட்சியில் இருக்க முடியவில்லை. எனவே மத்திய பா.ஜனதா ஆட்சியும் இந்த 10 ஆண்டுகளுடன் முடிவடைகிறது.
பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நாட்டில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகளின் கோரிக்கைகள் நியாயமானவை. விவசாயம் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்பதால் குறைந்த விலையில்லா சலுகையை அமல்படுத்தி சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும். விவசாயிகளும், விவசாயமும் அழிந்தால் பொருளாதாரம் பாதிக்கப்படும். இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார்.