மோடி தமிழகம் வருவதை பார்த்து தி.மு.க. பயப்படுகிறது: குஷ்பூ

தி.மு.க.,வில் கமல்ஹாசன் போல ஒரு முகம் பிரசாரம் செய்வதற்கு தேவை என்று குஷ்பூ கூறியுள்ளார்.

வேலூர் தொரப்பாடி ரெயில்வே மேம்பாலம் சர்வீஸ் சாலை பகுதியில் சுமார் 27 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் ஏ.சி.எஸ். இலவச திருமண மண்டபம், இலவச மருத்துவ மையம், இலவச வேலைவாய்ப்பு தகவல் மையம் மற்றும் இலவச கணினி பயிற்சி மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் குஷ்பூ மற்றும் திரைப்பட இயக்குநர் சுந்தர் .சி ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர்.

நிகழ்ச்சிக்குப் பின் குஷ்பூ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பெருவாரியான தொகுதிகளில் ஜெயிக்கும் என்று சொல்லும் பா.ஜ.க. ஏன் கூட்டணிக்காக தேடுகிறார்கள் என்று திராவிட கழக தலைவர் கி. வீரமணி விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நாங்கள்தான் ஜெயிக்கப் போகிறோமே. அவர்கள் ஏன் பயப்படுகிறார்கள். கமல்ஹாசனுக்கு மாநிலங்களவையில் ஒரு சீட் கொடுத்துள்ளார்கள். தி.மு.க.,வில் பிரசாரம் செய்வதற்கு யாரும் இல்லை. தி.மு.க.,வில் கமல்ஹாசன் போல ஒரு முகம் பிரசாரம் செய்வதற்கு தேவை. அதைத்தான் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நினைத்துள்ளார். முதல்-அமைச்சர் போனால் கூட்டம் வராது. கூட்டத்திற்காக முதல்-அமைச்சருக்கு கமல்ஹாசன் தேவையா?

பிரதமர் மோடி மீது வைத்துள்ள நம்பிக்கையால் நாடு முழுவதும் காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பா.ஜ.க.,வில் இணைகிறார்கள். கடந்த 65 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் செய்ய முடியாததை கடந்த 10 ஆண்டுகளில் மோடி செய்து காண்பித்துள்ளார். இதுதான் காங்கிரசுக்கும் பா.ஜ.க.,வுக்கும் உள்ள வித்தியாசம்.

பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருவதை தி.மு.க.,வினர் விமர்சிக்கிறார்களே என்ற கேள்விக்கு, பிரதமர் மோடி தமிழகம் வருவதை பார்த்து தி.மு.க. பயப்படுகிறது. மோடி வரும்போது தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சி ஏற்படுகிறது. அவர் தமிழகம் வருவதில் அவர்களுக்கு என்ன வருத்தம். தி.மு.க.,வினர் பயத்தில் தான் இது மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

மேலும் மக்களவைத் தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு, பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் எங்கு நிற்க சொன்னாலும் நிற்பேன். நாடு முழுவதும் பிரசாரம் செய்ய சொன்னாலும் இறங்கி பிரசாரம் செய்வேன். கட்சிக்காக நான் வேலை செய்ய வந்துள்ளேன். வேலூர் தொகுதிக்கான வெற்றிச் சின்னமாகிய ஏ.சி.எஸ். என் பக்கத்திலேயே அமர்ந்திருக்கிறார். நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் ஏ.சி. சண்முகம் தான் வெற்றி பெறப் போகிறார். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.