சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என இன்று பீகார் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 1ம் தேதி ஒத்திவைத்தது.
தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‛‛சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். அதேபோல் தான் சனாதனம்.” என்றார். இது விவாதத்தை கிளப்பியது. உதயநிதியின் இந்த பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் மீது போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும் உதயநிதிக்கு எதிராக பல மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. அதன்படி பிகார் மாநிலம் ஆரா ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞர் தரணிதர் பாண்டே என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‛‛உதயநிதி ஸ்டாலின் சனதான தர்மத்தை அழிப்பதாக பேசியுள்ளார். கோடிக்கணக்கான இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அவரது பேச்சு உள்ளது. அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனு ஆரா ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மாஜிஸ்திரேட் மனோரஞ்சன் குமார் ஜா விசாரணை நடத்தினார். அப்போது வழக்கு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் அல்லது அவரது தரப்பு வழக்கறிஞர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்ப அவர் உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை அவர் ஏப்ரல் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனால் உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.