குடியுரிமை திருத்த சட்டம் குறித்து முதலில் படியுங்கள்.. அப்போது தான் என்னவென்று தெரியும்: எல்.முருகன்

மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம் குறித்த அறிவிக்கையை வெளியிட்டதற்கு நடிகர் விஜய் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதற்கு மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பதிலளித்துள்ளார்.

நமது நாட்டில் ஏற்கனவே இருந்த 1955 குடியுரிமை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதற்கிடையே 5 ஆண்டுகள் கழித்து இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பிரனாயி விஜயன் ஆகியோர் இந்தச் சட்டத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

அதேபோல சமீபத்தில் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய்யும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்துள்ள விஜய், இந்த குடியுமை திருத்த சட்டத்தை எதிர்த்துள்ளார். இதற்கிடையே விஜய்க்கு மத்திய அமைச்சர் எல் முருகன் பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் விஜய் சிஏஏ எதிர்த்துள்ளது குறித்த கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “நான் ஒன்றை மட்டும் சொல்லி கொள்ள விரும்புகிறேன். இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் சொல்வது என்ன என்பதை முதலில் படியுங்கள். இதில் யாருக்கு பயன்.. யாருக்கு எதிராக இருக்கிறது என்பதை படியுங்கள். குடியுரிமை திருத்தச் சட்டம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து அடைக்கலம் கோரி வந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவது தான் குடியுரிமை திருத்த சட்டம்.. இந்தச் சட்டத்தின் கீழ் ஏற்கனவே நாட்டில் உள்ள யாரும் வெளிநாட்டிற்கு போகச் சொல்ல மாட்டோம். அங்க வாழ முடியாதவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. எனவே, இந்த குடியுரிமை திருத்த சட்டம் குறித்து முதலில் படியுங்கள்.. அப்போது தான் என்னவென்று தெரியும்.. தயவு செய்து படியுங்கள்” என்றார்.

முன்னதாக சிஏஏ தொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கையில், ” சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் (Citizenship Amendment Act 2019) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இந்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும்” என கூறப்பட்டு இருந்தது. அதற்கு தான் எல் முருகன் இந்த பதிலை அளித்திருந்தார்.