பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி வழங்கப்படும்: சபாநாயகர் அப்பாவு!

உச்ச நீதிமன்ற தீர்ப்பு என் கைக்கு வந்துவிட்டது. அதன்படி பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி வழங்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

கடந்த 2006 – 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 1 கோடியே 75 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக கடந்த 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. அப்போது தீர்ப்பு கூடிய நீதிமன்றம், கடந்த 2016 ஆம் ஆண்டு, பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.

கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி மேல் முறையீடு செய்து இருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் பொன்முடியின் 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில் தான் பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி கிடைக்குமா? என்ற விவாதம் எழுந்தது. இது தொடர்பாக இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டது போல் பொன்முடிக்கும் எம்எல்ஏ பதவி சட்டப்படி கிடைக்கும் என்று கூறினார். சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-

பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அவருக்கு ஒரு வழக்கில் உயர்நீதிமன்றம் தண்டனை வழங்கியது. இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனையை தடை செய்தது. தண்டனை தடை செய்யப்பட்டது. ஒரு தண்டனை தடை செய்யப்பட்டால் உயர் நீதிமன்றமோ.. அல்லது கீழமை மாவட்ட நீதிமன்றங்கள், குற்றவியல் நீதிமன்றங்கள், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதிக்கு தண்டனை வழங்குமானால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, 8-ன் படி அவர்கள் வகிக்கின்ற பதவி அந்த தண்டனைக் காலத்தை பொறுத்து அந்த பணியில் இருந்து அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். இப்போது, ஏற்கனவே அதன் அடிப்படையில், உயர்நீதிமன்ற தீர்ப்பு படி தொடர்ந்து பொன்முடி அப்பதவியில் நீடிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த உத்தரவின் படி பொன்முடியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை தொடர முடியாது என்று அறிவிக்கப்பட்டது. இப்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பில், உயர் நீதிமன்ற தீர்ப்பில் வழங்கப்பட்ட தண்டனை தடை செய்யப்பட்டதால் மீண்டும் பொன்முடிக்கு அந்த பதவியை வழங்க முடியும். தீர்ப்பு கைக்கு வந்துவிட்டது: அது எவ்வாறு என்றால், வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, லட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசல், உத்தர பிரதேச காசிப்பூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அன்சாதிப் இவர்களுக்கு எல்லாம் இந்திய அரசமைப்பு சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதுபோல் பொன்முடி விவகாரத்திலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு என் கைக்கு வந்துவிட்டது. நான் சட்டப்பேரவை முதன்மை செயலாளரிடம் அறிவுரை சொல்லியிருக்கிறேன். இதற்கான சட்ட நடவடிக்கைகள் சட்டப்படி எடுத்துக்கொண்டு இருக்கிறோம். விரைவில் செய்தியை பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.