முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவி விலக வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி!

தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்கத் தவறிய முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி இன்று வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பதை கண்டித்து, அதிமுக சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இன்று அதிமுகவின் சார்பில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிப் பகுதிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், இன்று காலை 10 மணியளவில் மனித சங்கிலிப் போராட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் கருப்புச் சட்டையுடன் நடந்த போராட்டத்தில் எடப்பாடி பங்கேற்றார். போராட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. திமுக பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிகிறது. போதை பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. பல கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பிடிபட்டு வருகின்றன. போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்கத் தவறிய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய திமுக நிர்வாகி ஜாபர் சாதிக், முதல்வர் குடும்பத்துடன் நெருக்கமாக உள்ளார். டிஜிபியிடம் பரிசு பெறுகிறார். இது கண்டிக்கத்தக்கது. ஜாபர்சாதிக் தொடர்புடைய அனைவரையும் விசாரிக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.