குடியுரிமை திருத்தச் சட்டத்தை பற்றி தெரியாமலேயே தமிழக அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றனர் என்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது அண்ணாமலை கூறியதாவது:-
சிஏஏ பற்றி தெரியாமலேயே எதிர்த்து பேசுகிறார்கள். சிஏஏ பற்றி தெரியாமலேயே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன. சிஏஏவால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேச இஸ்லாமியர்களுக்கு எந்த பதிப்பும் இல்லை. சிஏஏ யாருக்கும் குடியுரிமையை மறுக்கவில்லை. குடியுரிமை திருத்த சட்டம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளுக்கு பொருந்தும் என்று நான் சொல்லியிருக்கிறேன். இந்த 3 நாடுகளில் இருக்கக் கூடிய இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இல்லை. இந்த 3 நாடுகளும் அடிப்படையாக இஸ்லாமியர்கள் நாடு. இஸ்லாமியர்களுக்காக அங்கு சட்டம் இருக்கு. சொத்துக்காக தனிச்சட்டம் இருக்கு. எல்லாமே அவங்களுக்கு மதம் சம்பந்தப்பட்ட சட்டம் இருக்கு. இது அந்த நாடு, அந்த நாட்டினுடைய சட்ட திட்டம். இதில், தப்பு சரி என்று நான் ஏதும் சொல்லவில்லை. இந்த 3 நாடுகளும் தன்னை இஸ்லாமிய நாடுகள் என்று அறிவித்து உள்ளது. இதனால் அங்கு இருக்கக்கூடிய இஸ்லாமியர்கள் தவிர அங்கு இருக்கின்ற மற்ற எல்லா மதமும், குறிப்பாக கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள், சீக்கியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக கொண்டு வரப்பட்டது.
உதாரணத்திற்கு ஒரு இஸ்லாமியர் பிரான்சில் இருந்து வருகிறார். அவருக்கு குடியுரிமை மறுப்போம் என்று நாங்கள் சொல்லவில்லை. 11 ஆண்டுகள் இந்தியாவில் இருக்க வேண்டும். உங்களுக்கு குடியுரிமை கிடைக்கும் என்று சொல்கிறோம். வியட்நாமில் இருந்து ஒரு இஸ்லாமியர் வருகிறார் என்றால் அவரும் 11 ஆண்டுகள் இந்தியாவில் இருந்தால் குடியுரிமை கொடுப்போம். யாருக்கும் மறுக்கவில்லையே. இந்த மூன்று நாடுகளும் தன்னை இஸ்லாமியர்கள் நாடு என்று சொல்லியதால், அங்கு இருக்கக்கூடிய இஸ்லாம் மதம் இல்லாத மற்ற மதத்திற்கு மட்டும் கொடுத்திருக்கிறோம். இதனை எந்த அடிப்படையில் மதத்திற்கு எதிரி என்று சொல்லலாம்.
இன்றைக்கு இலங்கை வந்து தன்னை ஒரு சிங்களர் ரிபப்ளிகாக டிக்ளேர் செய்யவில்லை. ரணில் விக்ரமேசிங்கேவிடம் 13வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்த கோரி சொல்லியிருகிறார் பிரதமர் மோடி. ஜெய்சங்கரும் சொல்லியிருக்கிறார். 13 வது சட்டத்திட்டம் இலங்கையில் வந்துவிட்டால் தமிழர்கள் சந்தோஷமாக இருப்பார்கள். அதிகாரப்பூர்வமாக ஒரு நாடு தன்னை இந்த மதத்தின் நாடு, அந்த மதத்தின் நாடு என்று டிக்ளேர் பண்ணாத பட்சத்தில் எப்படி தனியாக அவர்களுக்கு குடியுரிமை திருத்த சட்டம் பொருந்தும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.