அதிமுக – பாஜக மறைமுக கூட்டணி அமைத்து நாடகம் ஆடி வருகிறார்கள்: முதல்வர் ஸ்டாலின்!

“கொங்கு மண்டலம் தங்கள் கோட்டை எனக் கூறும் அதிமுக, கொங்கு பகுதிக்கு என்ன செய்தது? . பொள்ளாச்சி சம்பவத்தில் தவறிழைத்த அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று அப்போதே உறுதி அளித்திருந்தேன்.” என்று பொள்ளாச்சியில் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.1237.51 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர், ஈரோடு திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்ததுடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் 57,325 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-

சிறப்பான 3 ஆண்டு கால ஆட்சியை வழங்கிய பெருமிதத்துடன் உங்களை சந்திக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுக வெல்வது நிச்சயம். கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரியில் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றியுள்ளோம். கலைஞர் மகளிர் உரிமை திட்டம், விடியல் பயணம், புதுமைப்பெண், இல்லம் தேடி கல்வி, காலை உணவு, நான் முதல்வன், மக்களை தேடி மருத்துவம், கள ஆய்வில் முதல்வர், இன்னுயிர் காப்போம், மக்களுடன் முதல்வர், நீங்கள் நலமா உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தி உள்ளோம். கோட்டையில் இருந்து திட்டத்தை அறிவிக்கும் முதலமைச்சராக மட்டுமில்லாமல் களத்தில் நேராக சென்று ஆய்வுசெய்கிறேன். மக்களுக்கான முத்திரை திட்டங்களை உருவாக்குவதில்தான் தமிழ்நாட்டின் தொழில்வளம் பெருகுகிறது. இதனைக் கண்டு சிலர் பொறாமை அடைந்து தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பொய்களைப் பரப்ப வாட்ஸ்ஆப் யுனிவர்சிட்டி நடத்துகிறார்கள். அவர்களுக்கு தக்க பாடம் புகட்டும் நேரம் வந்துவிட்டது. மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசு தடுப்பதாக பிரதமர் மோடி பொய் சொல்கிறார். எந்த திட்டத்துக்கு மாநில அரசு முட்டுக்கொட்டையாக இருந்தது. தேர்தலுக்கு முன்னதாக பொய் சொன்னால் ஏமாற நாங்கள் ஏமாளிகளா?. நான் ஒரு கோப்பில் கையெழுத்திட்டால் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள்.

10 ஆண்டுகால ஆட்சியில் வாக்களித்த மக்களுக்கு அதிமுக ஏதாவது நன்மை செய்ததா?. கொங்கு மண்டலம் தங்கள் கோட்டை என கூறும் அதிமுக, கொங்கு பகுதிக்கு என்ன செய்தது?. பொள்ளாச்சி சம்பவத்தில் தவறிழைத்த அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று அப்போதே உறுதி அளித்திருந்தேன்.

கொடநாடு கொலை சம்பவம் குறித்து முறையான விசாரணை நடைபெற்று வருகின்றது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, குட்கா விவசாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் எல்லாம் யாருடைய ஆட்சியில் நடந்தது?. மாமூல் வாங்கியவர்கள் பட்டியலில் அமைச்சரின் பெயரும், போலீஸ் டிஜிபி பெயரும் இருந்தது அதிமுக ஆட்சி. அந்த வழக்கு விசாரணையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவிடாமல் தடுப்பவர்கள்தான் இன்றைக்கு உத்தமர்கள் போல பேசுகின்றனர்.

அதிமுக – பாஜக மறைமுக கூட்டணி அமைத்து நாடகம் ஆடி வருகிறார்கள். மத்திய அரசின் உதவி இன்றியே பல சாதனைகளை செய்து வருகிறோம். உதவி இருந்தால் 10 மடங்கு சாதனைகளை செய்வோம். தமிழகம் வரும்போதெல்லாம் மோடி உத்தரவாதம் என்று கூறுகிறார். ஆனால் அவர் வேலைவாய்ப்பு குறித்த அளித்த வாக்குறுதி என்ன ஆனது?. அடுத்த வாரம் பிரதமர் வரும்போது, அவரிடம் தமிழகத்துக்கு என்ன செய்தீர்கள் என்று கேளுங்கள்.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதை ஜெயலலிதா தடுத்தாரா? அல்லது நாங்கள் தடுத்தோமா?. மத்திய அரசின் திட்டங்களை திமுக தடுப்பதாக பிரதமர் பொய் சொல்கிறார். பிரதமரின் கட்டுக்கதைகள் எடுபடாது. இவ்வாறு அவர் பேசினார்.