பெண்களுக்கு அரசு வேலைகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்: காங்கிரஸ் வாக்குறுதி!

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும், பெண்களுக்கு அரசு வேலைகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பெண்களுக்கான ஐந்து முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் நடைபெற்ற ‘இந்திய நியாய யாத்திரை’யின் ஒரு பகுதியாக பெண்கள் சார்பில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய ராகுல் காந்தி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒரு வீடியோ மூலம் இது தொடர்பாக விளக்கமளித்திருந்தார். அந்த 5 வாக்குறுதிகள்:

1. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும்.

2. ஏழைப் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

3. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களின் ஊதியம் இரண்டு மடங்கு உயர்த்தப்படும்.

4. பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பஞ்சாயத்துக்கு ஒரு பெண் பணியாளர் நியமனம் செய்யப்படும்.

5. நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான சாவித்ரிபாய் பூலே தங்கும் விடுதிகள் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.