இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது எனக் கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி. அதன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, தான் அளித்த மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சூரியமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில், திண்டுக்கல் சூரியமூர்த்தி தாக்கல் செய்துள்ள மனுவில், “அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்ட திட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரை புகார்கள் அளித்துள்ளேன். உட்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகளில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவுக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. மக்களவை தேர்தல் நெருங்குவதால், அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் நான் அளித்த மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என தனது மனுவில் கோரியிருந்தார். இந்த மனு வரும் மார்ச் 25ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், சூரியமூர்த்தியின் மனுவுக்கு பதில் அளிக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 11ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது பரபரப்பைக் கிளப்பியது. இந்நிலையில், இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சூர்யமூர்த்தி அளித்த மனு தொடர்பாக பதில் அளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் குழுவினர் தேர்தல் ஆணையத்தில் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், “அதிமுக பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் என்னை அங்கீகரித்துள்ளது. நீதிமன்றத்திலும், அதிமுக பொதுச் செயலாளராக என்னை அங்கீகரித்து உத்தரவு உள்ளது. எனவே இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதில் எந்த சிக்கலும் இல்லை. சூர்யமூர்த்தி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.