சென்னையை சேர்ந்த தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை கடந்த மார்ச் மாதம் 9ஆம் தேதி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். ஜாபர் சாதிக் உடன் சேர்ந்து போதை பொருளை கடத்த உதவிய தேனாம்பேட்டையை சேர்ந்த சதா என்பவரை இன்று கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருளை தேங்காயில் மறைத்து வைத்து வெளிநாடுகளுக்கு கடத்தியதின் மூலம் கிடைத்த பணத்தை தீவிரவாத குழுக்களுக்கு ஜாபர் சாதிக் கொடுத்தாரா என்ற கோணத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்த தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் இருந்து தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் விவரங்களை கேட்டுள்ளனர். ஜாபர் சாதிக் பயன்படுத்திய பழைய வங்கி கணக்குகள், பணப்பரிவர்தனை குறித்த தகவல்களை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் இருந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து தேங்காய் பவுடர், திராட்சை, உலர் பழங்கள் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து மெதம்பெடமைன் எனும் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படும் முக்கிய வேதிப்பொருளான சூடோபெட்ரின் சர்வதேச நாடுகளுக்கு கடத்தப்படுவதாக, டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த 15ஆம் தேதி போதைப் பொருள் தடுப்பு பிரிவினரும் டெல்லி போலீசாரும் சோதனை செய்தனர். இதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ வேதிப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்டு வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பது அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஜாபர் சாதிக்கை விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை சாந்தோமில் உள்ள அவரது வீட்டில் கடந்த மாதம் 23-ம் தேதி சம்மன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால், அவர் தலைமறைவானார். இதையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி வீட்டுக்கு சீல் வைத்தனர். மேலும் ஜாபர் சாதிக், வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸும் அனுப்பப்பட்டது.
இதற்கிடையில், தலைமறைவாக இருந்து வந்த ஜாபர் சாதிக் கடந்த மார்ச் 9 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஜாபர் சாதிக்கை கைது செய்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 7 நாட்கள் காவலில் எடுத்து அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் தான் ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதா என்பவரை இன்று (மார்ச் 13) சென்னையில் வைத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ரூ.2,000 கோடி சூடோபெட்ரைன் என்ற போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.